பக்கம்:பாலைச்செல்வி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இ. புலவர் கா. கோவிந்தன் அவர் வாழ்வில் இன்பம் இருக்காது. அவர்க்கு அச் செல்வம் இன்பத்தைத் தாராது; மாறாகத் துன்பமே தொடர்ந்து நின்று துயர் செய்யும். ஆகவே, இன்ப வாழ்விற்கு வேண்டுவது பொருள் அன்று, ஒத்த காதலே, ஒன்றிய மனமே என்ற உண்மையை நீ உணர்தல் வேண்டும். நிற்க. வாழ்வில் இன்பம் காண வேண்டின் ஒன்றிய மனம் வேண்டும் என உணர்ந்தவுடனே, என் அன்பே ! நம் காதல் எளிதில் கருகி விடாது. ஒன்றிய நம் உள்ளங்களைப் பிரித்துப் பாழாக்குவார் எவரும் இலர். அவ் வொற்றுமை இறவாது. அது மறுமையிலும் தொடர்ந்து நம்மோடு வரும். ஆகவே, யான் சென்று பொருளிட்டி வரும்வரை பொறுத்திருந்து, பின்னர் அக் காதற் பயன் துய்ப்போமாக! எனக் கூறிப் பிரியத் தோன்றும் உனக்கு, அன்ப! அது இயலாது. காதல் கருகாது என்பதை யானும் அறிவேன். ஆனால் அக்காதற் பயனைப் பெற வேண்டின், அதற்கு அவ்வொற்றுமை ஒன்று மட்டும் போதாது, அவ்வொற்றுமையோடு இளமையும் இணைந்த வழியே அது பயன்படும். ஆனால், கருகாது நெடிது நாள் வாழும் காதல் போன்றதன்று இளமை. அதன் வாழ்வு நிலையற்றது. நாளையே அது இறந்துவிடும். இறந்தால் அது இறந்ததே! அதை மீட்டும் பெறுதல் இயலாது. இளமையை இழந்துவிட்டுக், காதலை மட்டும் வைத்துக் கொண்டு, வாழ்விற் பயன் காணல் இயலாது. ஆகவே, அன்ப! எவ்வழி நோக்கினும், பொருள் தேடிப் போதல், இந்நிலையில் பொருந்தாது; பொருந்தாது என்பது மட்டுமன்று, இந்நிலையில் தேவையற்றதுமாம். இவற்றை யெல்லாம் நன்கு எண்ணிப் பின்னர், விரும்பியவாறு செய்க!' என்று கூறி, மனைவியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/146&oldid=822150" இலிருந்து மீள்விக்கப்பட்டது