பக்கம்:பாலைப்புறா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 51

குண்டுங்குழியுமான தரையையும், பாச்சான், பல்லி வகையறாக்களையும் பார்த்த மனோகர் ஆச்சரியமாய்க் கேட்டான்.

‘என்ன டாக்டர். இந்த குவார்ட்டர்ஸ் இப்படி மாட்டுத் தொழுவம் மாதிரி இருக்குது'?

‘ஆயிரம் ரூபாய் கொடுத்து குதிரை வாங்குவாங்க. அதைக் கட்டிப் போட ஐந்து ரூபாய்க்கு கயிறு வாங்க மாட்டாங்க. இதுதான் கவர்ன்மென்ட்’.

‘அப்போ நம்ம வீட்டுக்கு அறுத்துட்டு வந்திடுங்க. இல்லன்னா கலைவாணி வீட்டில் அவள் அறையில் இருங்க. அவள் மெட்ராஸ் காரியாய் ஆகப் போறவள் பாருங்க. இந்த குவார்ட்டர்ஸ் பார்க்கவே சகிக்கல’.

"எதைவிட முடியாதோ... அதை சகித்துத்தானே ஆகணும். எப்படி நம்ம உடம்புக்குள்ளே நமக்குத் தெரியாமல், நல்லதும், கெட்டதும் நடக்கிற மாதிரி, ஒரு குடியிருப்புக்குள்ளயும், பல்லி, பாச்சான், பாம்புகூட வந்துடுது. நாம்தான் அதோட சேர்ந்து வாழப்பழகிக்கணும். எம்மா ஹார்லிக்ஸ் கொண்டுவாங்க”

"காபி இல்லியா டாக்டர்?”

“இனிமேல்... நீங்க காபி குடிக்கக் கூடாது. உடம்பிலே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிற... இல்லாவிட்டால், குறைகிற அந்த சக்தியை ஒரளவுக்கு தடுக்கிற வேர்க்கடலை, முட்டை போன்ற சத்துணவு பொருட்களையும், சக்தித் தரக்கூடிய வாழைப்பழம், கோதுமையையும், கிருமிகளைத் தடுக்கிற மொச்சைக் கொட்டை, பாசிப்பருப்பு வகையறாக்களையும், நீங்க அதிகமாய் சாப்பிடணும்".

மனோகர், அவளைக் கண் நிறுத்திப் பார்த்தான். ஒரு கப் காபி கேட்டதுக்கு, இவ்வளவு பெரிய பாட்டி உபதேசமா...? ஆனாலும் சிரித்துக் கொண்டான். வேலைச்சுமையை நினைத்ததும், உடல், அந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே, மானசீகமாய் பறந்தது. இந்த கோணச் சத்திரத்திலேயே, ஒரு மியூசிக் பார்ட்டி இருக்குதாம். கண்டுபிடித்து, அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். தென்காசியில் போய் வீடியோக்காரனுக்கு முன் பணம் நீட்ட வேண்டும். அப்புறம் சாமியானா பந்தல்... அப்பா, அம்மா வழியாய்ச் சொன்னதை நிராகரிக்க வேண்டும். மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தாக வேண்டும். அப்பா கிடக்கார். ஊர்க்காரன் நம்மையும் சேர்த்துச் சாப்பிடுவான். ஒரு வேளை சோறு போட்டால் போதும், என்றாராம். அசல் காட்டுமிராண்டி... ஏதோ பிறந்த கடனுக்கு பிள்ளையாய் இருக்க வேண்டியதாய்தான் உள்ளது. இன்னும் ஹார்லிக்சைக் காணுமே...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/51&oldid=1405010" இலிருந்து மீள்விக்கப்பட்டது