பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

திருக்குறள்

தமிழ் மரபுரை


நன்றி மறப்பதென்பது மறந்து ஈடான நன்மை செய்யாமையும் தீமை செய்தலுமாம். நன்றல்லது மறப்பதென்பது மறந்து எதிர்த் தீமை செய்யாமையும் நன்மை செய்தலுமாம்.


109. கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.

(இ-ரை.) கொன்ற அன்ன இன்னா செயினும் - தமக்கு முன்பொருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற பெருந் தீமைகளைச் செய் தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவை யெல்லாம் அவர் செய்த நன்மை யொன்றையே நினைத்தமட்டில் நன்றி யறிவுடையார் மனத்தில் இல்லாமல் மறைந்துபோம்.

இஃது உண்மையான அல்லது தலையாய நன்றியறிவுடையார் செயலாம்.


110. எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

(இ-ரை.) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - எத்துணைப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத் தீவினைகள் நீங்கும் கழுவாய் (பிராயச்சித்தம்) உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்கோ தப்பும் வழியே இல்லை.

பேரறக் கெடுப்புகளாவன: ஆவின் மடியறுத்தலும், குழவிகளையும் நிறைசூலியரையும் தூய துறவியரையுங் கொல்லுதலும், ஊருண்ணுங் கிணற்றில் நஞ்சிடுதலும். இவை போல்வன பிறவுமாம்.

அதி. 12-நடுவுநிலைமை

அதாவது, தகுதிபற்றி ஒருவரை ஒரு வினைக்கு அமர்த்தும் போதும், திறமைபற்றி ஒரு துறையிற் சிறந்தவர்க்குப் பரிசளிக்கும் போதும், விலைக்குக் கொள்ளும் பொருட்டுப் பண்டங்களுள் நல்லனவற்றைத் தெரிந் தெடுக்கும்போதும், குற்றச்சாட்டுப்பற்றி ஒருவர் நடத்தையை ஆய்ந்து தீர்ப்புக் கூறும் போதும் பகை நட்பு நொதுமல் (அயல்) என்னும் முத்திறத்தும் ஒத்திருந்து உண்மைப்படி ஒழுகுதல். நன்றி செய்தவரிடத்துங் கண்ணோடி