பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

108

திருக்குறள்

தமிழ் மரபுரை


130. கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.

(இ-ரை.) கற்றுக் கதம் காத்து ஆற்றுவான் செவ்வி - அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கியொழுக வல்லவனின் செவ்விய மனநிலையை, அறம் ஆற்றின் நுழைந்து பார்க்கும் - அறத்தெய்வம் அவனைத் தலைக்கூடுமாறு அவனை யடையும்வழிச் சென்று நுணுகி நோக்கும்.

செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் கேற்ற இனிய மனநிலை. செவ்வையான நிலை செவ்வி. அறத்தெய்வம் அவனைக் கண்டு பாராட்டி மகிழ்தற்குச் சமயம் பார்க்கும் என்றது, அந்த அளவிற்கு அவன் அடக்கமுடைமையிற் சிறந்தவன் என்பதை உணர்த்தற்கு. "நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை" (தொல்.867).

அதி. 14 - ஒழுக்கமுடைமை

அதாவது, அறத்திலும், கடமையிலும் வழுவாதொழுகுதல். முக்கரணமும் அடங்கியவழி இஃது எளிதாகலின், அடக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.

131. ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும்.

(இ-ரை.) ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ் வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.

உயிர் எல்லாப் பொருளினுஞ் சிறந்ததாயினும், அவ் வுயிருக்கே சிறப்பைத் தருதலால் 'உயிரினு மோம்பப்படும்' என்றார்.

132. பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை.

(இ-ரை.) ஒழுக்கம் பரிந்து ஓம்பிக் காக்க - ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாவாறு வருந்தியும் பேணிக் காக்க; தெரிந்து ஓம்பித் தேரினும் அஃதே துணை - பலவகை யறங்களையு மாராய்ந்து அவற்றுள் இருமைக்கும் துணையாவதை எவ்வளவு கவனமாகத் தேர்ந்தாலும், அவ் வொழுக்கமே துணையாக முடியும். ஏகாரம் பிரிநிலை.