பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - வெஃகாமை

123




"இம்மைச் செய்தன யானறி நல்வினை
யும்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது"

(சிலப்.15:61-3)

என்னும் மாடலன் கூற்றும்.

"என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே"

என்னும் பட்டினத்தார் பாடலும். இவ்வகை யாராய்ச்சியைக் குறிக்கும்.

170. அழுக்கற் றகன்றாரு மில்லையஃதில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாருமில்

(இ-ரை.) அழுக்கற்று அகன்றாரும் இல்லை - பொறாமைப்பட்டுப் பெரியவராயினாரு மில்லை: அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அக்குணமில்லாதவர் பேராக்கத்தின்று நீங்கினாரு மில்லை.

இது பழவினையால் தாக்குண்ணாத பிறப்பின் நிலைமையைக் கூறுவது.

அதி. 18- வெஃகாமை

அதாவது, பிறர் பொருள்மேல் ஆசைகொள்ளாமை. பொறாமையினாற் பிறர் பொருளைக் கவர விரும்புவது இயல்பாதலால், இது கூடாதென்பதற்கு அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது. வெள் - வெள்கு வெஃகு. வெஃகுதல் விரும்புதல்.

171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.

(இ-ரை.) நடுவு இன்றி நல் பொருள் வெஃகின் - பிறர் பொருளையும் தம் பொருள்போற் கருதும் நடுவுநிலைமையில்லாது அவரது நற்செல்வத் தின்மேல் ஒருவன் ஆசைவைப்பின்; குடிபொன்றி - அவன் குடிகெட்டு: குற்றமும் ஆங்கே தரும் - அத் தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கேதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.