பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை

131



அயலாரையும் பகைவரையுங் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல். இங்குப் பிறர் என்னும் பொருட்டாய் நின்றது. பிறர் குற்றம்போல் தம் குற்றமுங் காண்டலருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றார். கண்டவழித் தீவினை நிகழாதாதலின் அதனால் துன்பமு மிராதென்பதாம். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இனி, காண்கின்பின் என்று பிரிப்பினும் அமையும். உடல் நில்லா தொழியவும் உயிர் நிலைபெற்று நிற்றலால் மன்னுமுயிர் என்றார்.

அதி. 20 - பயனில சொல்லாமை

அதாவது, வேலை செய்யாத ஓய்வு நேரத்திலும் தனக்கேனும் பிறர்க்கேனும் அறம்பொரு ளின்பங்களுள் ஒன்றும் பயவாத வீண் சொற்களைச் சொல்லாமை. பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என்னும் நால்வகைச் சொற்குற்றங்களுள், பொய் இல்லறத்தார்க்குப் பயன்படுமாறும் துறவறவியலிற் கண்டிக்கப்படுவதனாலும், கடுஞ்சொல் இனியவை கூறலானும் குறளை புறங்கூறாமையானும் விலக்கப்பட்டமையாலும், எஞ்சி நின்ற பயனில் சொல்லைக் கடிவது. இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒன்றைச் சொல்வதற்குக் கேட்பாரும் வேண்டியிருத்தலின் இருவர்க்குக் குறைந்து சொல்லாட்டு நிகழ்த்த முடியாது. இருவரோ பலரோ கூடி வீண்பேச்சுப் பேசும் போது, நகையாடி மகிழ்தற்கேனும் பிறரைப்பற்றிப் புறங்கூற்றாகப் பேச நேருமாதலின், அத்தொடர்புபற்றி இது புறங்கூறாமையின்பின் வைக்கப்பட்டது.


191. பல்லார் முனியப் பயனில சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும்.

(இ-ரை.) பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாரும் எள்ளப் படும் - எல்லாராலும் இழிவாய் எண்ணப்படுவான்.

எல்லாரும் என்று பிற்குறித்ததனால் பல்லார் என்று முற்குறித்தது. அறிவுடையாரை யென்பது உய்த்துணரப்படும். அறிவுடையார் வெறுக்கவே அவரைப் பின்பற்றி ஏனையோரும் வெறுப்பர் என்பது கருத்து. எள்ளுதல் மனத்தின் செயல்.

192. பயனில பல்லார்முற் சொல்ல னயனில நட்டார்கட் செய்தலிற் றீது.