பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

134

திருக்குறள்

தமிழ் மரபுரை



199. பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த மாசறு காட்சி யவர்.

(இ-ரை.) மருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர் - மயக்கத்தினின்று நீங்கிய குற்றமற்ற அறிவுடையார்; பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.

மயக்கம் ஐயமுந் திரிபும். குற்றமற்ற அறிவு மெய்யறிவு அல்லது தூய அறிவு.

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.

(இ-ரை.) சொல்லின் பயன் உடைய சொல்லுக - ஏதேனு மொன்றைச் சொல்லின் பயனுள்ள சொற்களையே சொல்லுக; சொல்லின் பயனிலாச் சொல் சொல்லற்க - சொற்களிற் பயனில்லாதவற்றைச் சொல்லாதிருக்க.

ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது அதை வலியுறுத்தற்காதலின், கூறியது கூறலன்று. ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது 'சொற்பொருட் பின்வருநிலை' யணியாம்.

அதி. 21 - தீவினையச்சம்

அதாவது, இம்மையிலும் மறுமையிலும் துன்பம் விளைவிக்கும் தீவினைகட்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல். பயனில் சொல்லையும் தீச்சொல் என விலக்கியமையால், தீவினை விலக்கப்பட்டமை சொல்லாமலே பெறப்படும். முக்கரணத்துட் சொல்லிற் கடுத்தது செயலாதலால், இது பயனில சொல்லாமையின் பின் வைக்கப்பட்டது. தீச்சொல்லினும் தீச்செயல் கொடியது என்பதை வலியுறுத்தற்குத் தீவினை செய்யாமை என்னாது தீவினையச்சம் என்றார்.

201. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு.

(இ-ரை.) தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்கு: தீவினையார் அஞ்சார் - தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர் - ஆயின் அதைச் செய்தறியாத சீரியார் அஞ்சுவர்.