பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

138

திருக்குறள்

தமிழ் மரபுரை



அதி.22-ஒப்புரவறிதல்

அதாவது, இல்லறத்தாருட் பெருஞ் செல்வரானவர் செல்வருள் உயர்ந்தோரான வள்ளல்களைப் பின்பற்றி யொழுகுதலின்கண், “வளவனாயினும் அளவறிந் தழித்துண்” என்ற நெறிமுறைப்படி தத்தம் அளவறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளுதல். உயர்ந்தோரான வள்ளல்களை யொத்தொழுகுதலும் அவரவர் செல்வத்தின் அளவறிதலும்பற்றி ஒப்புரவறிதல் எனப்பட்டது. இது பெருஞ்செல்வர்க்குரிய உலக நடையாம்.

"இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிகன் ஆயலன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட்டன்றவன் கைவண் மையே" (புறம்.134)

என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியிருத்தல் காண்க.

தீவினைக்கு எதிரானதும் அதைப் போக்க வல்லதும் நல்வினை யாதலானும், நல்வினையிற் சிறந்தது ஈகையாதலானும், ஈகையிற் சிறந்த வகையான ஒப்புரவறிதல் தீவினையச்சத்தின் பின் வைக்கப்பட்டது. தீவினையாகிய மறத்திற்கு மாறும் மாற்றும் அறம். அறத்தின் சிறந்த வகை ஈகை. “ஈதலறம்” என்றார் ஔவையாரும்.

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு.

(இ-ரை.) உலகு மாரிமாட்டு என் ஆற்றும் - உலகிலுள்ள உயிர்கள் தம் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரை யுதவுகின்ற முகிலுக்கு என்ன கைம்மாறு செய்கின்றன; ஒன்றுமில்லையே! கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆதலால், அம் முகில் போலும் வள்ளல்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு வேண்டுவனவல்ல.

'என்னாற்றும்' என்ற வினாவிற்குரிய விடை வருவித் துரைக்கப்பட்டது. 'கடப்பாடு என்னுஞ் சொல் பெருஞ் செல்வர் வறியார்க்குதவக் கடமைப்பட்டவர் என்பதை யுணர்த்தும். கடப்படுவது கடப்பாடு. இனி, வள்ளல்கள் தம் கடமையாகக் கொண்டொழுகுவது கடப்பாடு எனினுமாம்.