உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

140

திருக்குறள்

தமிழ் மரபுரை



214. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

(இ-ரை.) ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும் செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.

உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங் கருதப்படாது பிணமென்றே இழித்திடப்படுவான் என்றார்.

215. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு.

(இ-ரை.) உலகு அவாம் பேரறிவாளன் திரு - உலகிலுள்ள உயிர்களை யெல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான் செல்வம்; ஊருணி நீர் நிறைந்த அற்றே - ஊர்வாழ்நரின் குடிநீர்க் குளம் நிரம்பினாற் போன்றதே.

பாரி முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போர்வையும் உதவிய செயல்கள், ஒப்புரவாளர் அஃறிணை யுயிர்களையும் விரும்புவதை அறிவிக்கும். ஊருண்பது ஊருணி. இது பாண்டிநாட்டு வழக்கு. இல்லற நிலையிலேயே இருதிணை யுயிர்களிடத்தும் அன்பு செய்பவனைப் பேரறிவாளன் என்றார். ஊருணி என்ற உவமத்தால் மாபெருஞ் செல்வம் என்பதும், ஒப்புரவாளன் வாழுங் காலமெல்லாம் எல்லார்க்கும் என்றும் எளிதில் உதவும் என்பதும் பெறப்படும். நீர்நிறைதல் ஒருசொற் றன்மையது. ஏகாரம் தேற்றம்.

216. பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ நயனுடை யான்கட் படின்.

(இ-ரை.) செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் நேர்மையாளனிடம் சேருமாயின்; பயன் மரம் உள்ளூர்ப் பழுத்த அற்று - அது பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற் போலும். ஒப்புரவு நேர்மை மிக்க செயலாதலின் அதை நயன் என்றார். நச்சு மரத்தை விலக்கப் பயன்மரம் என்றார். ஊருள் என்பது உள்ளூர் என முறை மாறியது இலக்கணப் போலி 'ஆல்' அசைநிலை.