பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

திருக்குறள்

தமிழ் மரபுரை





புல்ல ரிருந்தென்ன போயென்ன எட்டிமரம். காயா திருந்தென்ன காய்த்துப் பயனென்ன" என்று படிக்காசுப் புலவரும் பாடியமை காண்க. 'இனிததூஉம்' இன்னிசை யளபெடை.

அதி. 24-புகழ்

அதாவது, ஒருவர்க்கு உலகமுள்ள அளவும் அழியாது நிற்குங் கீர்த்தி. இது ஈகையால் நிகழ்வதால் அதன்பின் வைக்கப்பட்டது.

231. ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.

(இ-ரை.) ஈதல் - வறியார்க்கு வேண்டியவற்றை இயன்றவரை ஈக; இசைபட வாழ்தல் - அதனாற் புகழுண்டாக வாழ்க: அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - அப் புகழன்றி மக்களுக்கு இவ் வுலகத்திற் பெறக்கூடிய நிலையான பேறு வேறு ஒன்றுமில்லை.

இடத்தில் வறியார்க்கு நிலமும், கருவியில் வறியார்க்குப் பொறியும், நலத்தில் வறியார்க்கு மருந்தும், அறிவில் வறியார்க்கு நூலும், காப்பில் வறியார்க்குப் பாதுகாப்பும் அளிப்பதும் ஈதல் வகைகளேயாயினும்,

"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்"

(புறம்.18)

என்று குடபுலவியனாரும்,


"உடம்பா ரழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்"

(திருமந். 724)

என்று திருமூலரும் கூறுவதால், பொருளில் வறியார்க்கு, உணவேனும் அதற்குரிய பொருளேனும் ஈதலே முன்மையும்(priority) முதன்மையும் பெறுவதாம். 'ஈதல்', 'வாழ்தல்' இரண்டும் தல்லீற்று வியங்கோள். ஈதல் வேறுயிரினங்கட்கு இன்மையின், இங்கு உயிரென்றது மக்களுயிரை.

232. உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்.