பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

திருக்குறள்

தமிழ் மரபுரை



அதி. 30- வாய்மை

அதாவது, பொய்ம்மைக்கு மறுதலையான மெய்ம்மை. கூடாவொழுக்கத்திலும் களவிலும் பொய்ம்மை கலந்திருத்தலாலும், பொய்ம்மை நீக்கப் பெறின் அவ் விரண்டும் நிகழா வாதலாலும், இது கூடாவொழுக்கங் கள்ளா மைகளின்பின் வைக்கப்பட்டது.

291. வாய்மையெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.

(இ-ரை.) வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்; தீமை யாது ஒன்றும் இலாத சொலல் - அது எவ்வகை யுயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல்லுதலாம்.

வாய்மையின் இலக்கணம் பிறர்க்கும் பிற வுயிர்கட்கும் தீங்கு பயவாமையே யன்றி நிகழ்ந்தது கூறலன்று என்பது கருத்து. இது திருக்குறளை ஒப்புயர்வற்ற உலக அறநூலாக்கும் இயல் வரையறையாம்.

உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் ஒருபொருட்சொல் மூன்றும், முறையே, உள்ளமும் வாயும் உடம்புமாகிய முக்கரணத்தொடு தொடர்புடையனவாகச் சொல்லப்பெறும். இனி, உள்ளது உண்மை, வாய்ப்பது வாய்மை, மெய்(substance) போன்றது மெய்ம்மை எனினுமாம்.

292. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

(இ-ரை.) புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு விளைக்குமாயின்: பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்யான சொற்களும் மெய்யான சொற்களின்பாற் பட்டனவாம்.

குற்றமற்ற நன்மையாவது, எவருக்கும் எவ்வகைத் தீங்கும் இழப்பும் விளைக்காத நற்பயன், அது, வழிச்செல்லும் சிறாரை நோக்கித் தாம் செல்லும் ஊர் மிகத் தொலைவிலிருந்தும் அணியதென்பதும், மருத்துவன் நோயாளியை நோக்கி அவன் நோய் மிகக் கடுமையாயிருந்தும் வரவர நலமாகி வருகின்ற தென்பதும், ஒருவர்க்குத் தொடர்ந்து விக்கலெடுப்பதைத் தடுக்க அவர் திடுக்கிடத்தக்க ஒரு பொய்ச் செய்தியைச் சொல்வதும் போல்வதாம்.