பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

திருக்குறள்

தமிழ் மரபுரை


பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ!

அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆன்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்!

மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு!

கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு!

இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ?

ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்!

இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் தமிழ்ப் போராளி - திருத்தரு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக!

வாழிய நலனே! வாழிய நிலனே!

இன்ப அன்புடன்
இரா. இளங்குமரன்.