உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழ் இலக்கிய வரலாறு


தின்பண்டங்களும் தமிழர் சமையல் வினைப்பட்டனவேனும், அவற்றைப் பிராமணர் நாணாது கோணாது வெளிப்படையாய் வாங்கி விரும்பியுண்கின்றனர்.

இனி, மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் பலவும் சமையல் வினைப்பட்டனவே.

பிராமணர் வெளிநாடுகள் செல்லின், அங்குள்ள நிலைமைக் குத் தக்கபடி தம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கின்றனர். மேனாட்டா ரெல்லாரும் மாட்டிறைச்சி யுண்பவர். நம் நாட்டிலோ மாட்டிறைச்சி யூண் கடைப்பட்ட குலச் சின்னம்.

இனி, வடநாட்டுப் பிராமணரோ வெனின், தென்னாட்டுப் பிராமணர்போல் அத்துணைக் குலவேற்று வாழ்க்கையை விரும்பு வதில்லை. பிராமணர் பிறகுலத்தார் உண்டிச்சாலையிலும் உண்பர். பிராமணர் வீடுகளிற் பிறரும் குடியிருக்கலாம்.

இவற்றையெல்லாம் நோக்குங்கால், தமிழர் பகுத்தறிவிழந்து தன்மானமின்றித் தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டமை புலனாகின்றது.

“நல்ல குலமென்றுந் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை
என்றிவற்றா னாகுங் குலம்.” (நாலடி. 195)

“நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத்
தலையாகச் செய்வானுந் தான்”. (நாலடி. 248)

(4) பிறநாட்டார், தம்மைப்பற்றியோ தம் மொழியைப் பற்றியோ ஏதேனுமொரு பொத்தகத்தில் தவறாய் அல்லது தாழ்வாய் எழுதியிருப்பின், உடனே அதைக் கண்டித்து அதைத் திருத்தும்வரை கிளர்ச்சி செய்வர். ஆயின், தமிழரோ, “எங்கெழிலென் ஞாயிறெ மக்கு” என்றிருப்பர்.

எருதந்துறை (ஆக்கசுப் போர்டு) ஆங்கிலச் சிற்றகர முதலியில், ‘Dravidian' என்னுஞ் சொல்லிற்கு, “Skr. Dravida, a province of S. India'.” என்றும், `ginger' என்னுஞ் சொல்லிற்கு, “OE & LL gingiber f. L. zingiber. f. Gk ziggiberis f. Skr. crngavera (crnga horn, vera body") என்றும், மூலங்காட்டப்பட்டுள்ளன.

தமிழ்-தமிழம்-வ. த்ரமிள-த்ரமிட-திரவிட என்பதும், இஞ்சி வேர் -zingiber-LL gingiber-E. ginger என்பதுமே, சரியான மூலமாகும்.