உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

73




பின்னிணைப்பு


1. புரட்சி

தமிழ் சமற்கிருதப் பிணிப்பினின்றும், தமிழன் ஆரிய அடிமைத் தனத்தினின்றும் விடுதலை பெறும்வரை, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழன் முன்னேற்றத்திற்கும் இடமின்மையால்,


“தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின்
முதலமைச்சாய் வருதல் வேண்டும்”

என்று பாடினார் புரட்சி பாவேந்தர். ஆயின், அது போதாது. தமிழாய்ந்த தறுகண்மைத் தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும். பேதைக்கில்லை ஊதியம்; பேடிக்கில்லை படைக்கலம்; அடிமைக்கில்லை விடுதலை; அஞ்சிக்கில்லை அடைக்கலம்.

உலக வரலாறு (World History), குமுகவியல் பண்பாட்டியல் மாந்தனூல் (Social and Cultural Anthropology), ஒப்பியன் மொழிநூல் (Comparative Philology) என்னும் மூவறிவியல் தமிழ் விடுதலையைச் சார்ந்திருப்பதால், தமிழியக்கத்தை மொழிவெறியென்றோ இனவெறியென்றோ எவருஞ் சொல்லமுடியாது.

ஆயினும், ஆராய்ச்சியில்லாக்கு உண்மையை அறிவுறுத்தற் பொருட்டு, பின்வருமாறு ஒரு பட்டிமன்றம் நிகழலாம்.

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வனார் (கருணாநிதியார்), மாண்புமிகு கல்வியமைச்சர் நெடுஞ்செழியனார், அரசவயவர் அ. முத்தையாச் செட்டியார், தவத்திருக் குன்றக்குடியடிகள், அருட்டிரு அழகரடிகள், கவியோகியார் சுத்தானந்த பாரதியார், அருட்டிருக் கிருபானந்த வாரியார் (அருளின்ப வாரியார்), உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, பெரும்புலவர் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, பர். (Dr.) பாலசுப்பிரமணியனார், தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. உலகநம்பியார் (விசுவநாதம்) முதலிய நடுவர் முன், உலகம், காலம், சமையம், தானம், தெய்வம், நாடகம், பள்ளி, பூதம், முகம், வட்டம் முதலிய நூறு வடமொழி தென்மொழிப் பொதுச்சொற்களைத் தென்சொல்லென்று நாட்டுவேன். சமற்கிருதப் பண்டிதர் அதை மறுத்தல் வேண்டும். நடுவர் பெரும்பான்மை முடிபே தீர்ப்பாகும்.