156
ஒப்பியன் மொழிநூல்
""
“கசதப மிகும்வித வாதன மன்னே
(நன். 165) என்று, மன்னையிடைச் சொல்லை, நன்னூலார் மிகுதிப் பொருளில் வழங்கியதுங் காண்க.
வியங்கோள் வினை வாழ்த்து, சாவிப்பு, ஏவல், வேண்டு கோள், வஞ்சினம், விருப்பம், சொல்லளிப்பு முதலிய பல பொருள்களில் வரும். இவற்றுள், வாழ்த்து முதல் வேண்டுகோள் வரையுள்ள பொருள்கள் தன்மைக்கும், வஞ்சினம் சொல்லளிப்பு என்னும் பொருள்கள் முன்னிலைக்கும் படர்க்கைக்கும் ஏற்கா. வியங்கோள் வினைக்குச் சிறந்த பொருள்களான வாழ்த்து, வேண்டுகோள் என்னு மிரண்டும் அவற்றின் மறுதலைகளான, சாவிப்பு, ஏவல் என்பனவும் தன்மைக்கு ஏற்காமையின், வியங்கோள் பெரும்பாலும் தன்மையில் வராது எனக் கூறப் பட்டது. ஆனால் முன்னிலைக்கு இவ் வரையறை கூறினது தவறேயாகும். ஆகையால், முரஞ்சியூர் முடிநாகராயர் பாட்டில் 'நிலீயர்' என்னும் வியங்கோள் வினை வந்திருப்பது கொண்டு, அவரைத் தொல்காப்பியருக்குப் பிந்தியவராகக் கூறமுடியாது. மேலும், தொல்காப்பியர் காலத்திலேயே அதோடு தொல்காப் பியத்திலேயே, தொல்காப்பிய இலக்கணங்கட்கு மாறான சில சொல்வடிவங்களைக் காணலாம்.
இதுவரை, தனித்தமிழ்க் கருத்துகளையே தழுவின முழு நிறைவான தமிழ் இலக்கணமாவது, இலக்கண உரையாவது இயற்றப்படவே யில்லை. ஆதலின், மொழிநூலைத் துணைக் கொண்ட தமிழ் முறையான நடுநிலை யாராய்ச்சியாலன்றி, உண்மையான தமிழிலக்கணத்தை யறியமுடியாததென்பது தேற்றம். தொல்காப்பியம் ஒன்றையே தழுவுவார் தமிழியல்பை அறியமுடியாதென்பதற்கு ஒரு காட்டுக் கூறுகின்றேன்.
கள் என்னும் ஈறு பலர்பாலுக்குரியதாகத் தொல்காப் பியத்தில் விதிமுறையிற் கூறப்படவில்லை. ஆயினும், “உயர் திணை யென்மனார் மக்கட் சுட்டே" என்று கள் ஈறுபெற்ற மக்கள் என்னும் பலர்பாற் பெயரைத் தொல்காப்பியரே வழங்கியிருக் கிறார். இதையறியாத சிலர், தொல்காப்பியர் காலத்தில், கள் ஈறு உயர்திணைப் பன்மைக்கு வழங்கவில்லை என்று கூறுகின்றனர்.
இனி, "பிறப்பியலிலுள்ள சூத்திரங்கட்கும் தைத்திரீய சுக்லயஜுர் வேதீயப்ராதிசாக்கிய சூத்திரங்களுக்கும் ஒற்றுமை