உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

17

தோன்றியதாகும். இது பின்னர் விளக்கப்படும். ஆரியச் சூத்திரரும் தமிழவேளாளரும் தம்முள் நேர்மாறானவர் என்பதைமட்டும் நினைவில் இருத்த வேண்டும்.

தமிழருக்கும் சூத்திரர் என்னும் பேருக்கும் எள்ளளவும் இயைபில்லை. ஆயினும், ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின், தமிழர் இங்ஙனம் தாழ்த்திக் கூறப்பட்டனர்.

(2) வாழ்க்கை நிலை (ஆச்சிரமம்): ஆரிய வாழ்க்கை பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் நான்கு நிலைகளாக வகுக்கப்படும்; இவற்றுள் கிருகஸ்தம் ஒன்றே சூத்திரனுக்குரியது; தமிழர் வாழ்க்கை இல்லறம் துறவறம் என இரண்டாகவே வகுக்கப்படும்; இவை எல்லாக் குலத்தார்க்கும் பொது.

(3) நூல்: ஆரிய நூற்கலைகள் நால் வேதம் (ருக்கு, யஜுர், சாமம், அதர்வணம்), ஆறங்கம் (சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருக்தம், சந்தம், கற்பம்), ஆறுசாஸ்திரம் (மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம்), அல்லது தரிசனம், மச்சம், கூர்மம் முதலிய பதினெண்புராணம். மனுஸ்மிருதி, யக்ஜ்ஞவல்கிய ஸ்மிருதி முதலிய பதினெண் ஸ்மிருதிகள் (தரும நூல்கள்), பவுட்கரம், மிருகேந்திரம் முதலிய இருபத்தெட்டாக மங்கள், நாட்டியம் இசைக்கருவிப் பயிற்சி முதலிய அறுபத்து நான்கு கலைகள் எனவும்; அஷ்டாதச (பதினெட்டு ) வித்தை (நால்வேதமும் ஆறங்கமும், புராணம், நியாய நூல், மீமாஞ்சை, ஸ்மிருதி என்னும் நால் உபாங்கமும், ஆயுள்வேதம், தனுர்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் நான்கும்) எனவும்; பிறவாறும், வகுத்துக் கூறப்படும்.

தமிழ் நூல்கள் இயல், இசை, நாடகம் எனவும்; அகப்பொருள் நூல்கள், புறப்பொருள் நூல்கள் எனவும்; பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மந்திரம்), பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலமாகவும் வகுக்கப்படும். கடைக்கழக (சங்க) நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு (பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்) எனவும், கழக (சங்க) நூல்கள், கழக மருவிய நூல்கள் எனவும் வகுக்கப்படும்.