உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

'உம்' என்னும் வேர்ச்சொல்

உம் (கூடுதற் கருத்து வேர்)

உம்முதல் = கூடுதல், இணைதல், உடனிருத்தல், பொருந்துதல், ஒட்டுதல், ஒத்தல்.

உம் என்னும் சொற்குக் கூடுதற்பொருள் இருத்தலாலேயே, அது இன்றும் எண்ணுப்பொரு ளிடைச்சொல்லாக வழங்குகின்றது.

எ-டு: அறமும் பொருளும் இன்பமும் வீடும்

வந்தும் போயும்.

ம. உம்,க.உம்.

எண்ணும்மை இடைச்சொல் பல பொருள்களை அல்லது சொற்களை ஒன்றுசேர்த்தல் காண்க.

உம்மிடைச் சொற்குக் கூடுதற்பொரு ளிருப்பதை, இருவகைச் சிறப்பும்மைக்கும் பகரமாக (பதிலாக), கூட என்னும் சொல் ஆளப் பெறின் பொருள் மாறாதிருப்பதாலும் அறியலாம்.

எ-டு: புலவர்க்கும் தெரியாத பொருள் = புலவர்க்குக்கூடத் தெரியாத பொருள்.

புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை = புலையன்கூட விரும்பாப் புன்புலால் யாக்கை.

யாம், நாம், நீம், தாம் முதலிய மூவிடப் பெயர்களின் பன்மையுணர்த்தும் மகரவொற்றும், உம்மிடைச் சொற் குறையே.

=

உம் - உமி = கூலங்களில் அரிசி பருப்பொடு கூடியிருக்கும் கூடுபோன்ற மெல்லிய தொலி.

ம. உமி,து. உமி, க. உம்மி, தெ. உமக்க.

உமிதல் = இதழ் (உதடு) கூட்டித்துப்புதல்.