உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

வேர்ச்சொற் கட்டுரைகள்

சுரிகுழல் = (சுருண்ட கூந்தலையுடைய) பெண் (பிங்.). சுரிமுகம் = 1. (சுழிந்த முகமுள்ள) சங்கு (திவா.). “முரசுடன் சுரிமுகந்தழங்க” (பாரத. அருச்சுனன்றீ. 77). 2. நத்தை (திவா.).

6

சுரியல் = 1. வளைவு. “சுரியற் றாடி" (மணிமே. 3: 116). 2. குழன்ற மயிர். "தென்றல். ............... சுரியற் றூற்றும்” (அகம். 21). 3.நீர்ச்சுழி (திவா.).

சுரிந்து = நீர்ச்சுழி. 'நீர் சுரிந்தொடு மதனைச் சுரிந்தென்றும் சுழியென்றும் வழங்குவதுபோல்” (யாப். வி. ப. 282).

சுரிதகம் = ஒருவகைத் தலையணி. “சுரிதக வுருவின தாகி” (நற். 86).

சுரி - சரி. சரிதல் = 1. சாய்தல். 2. சரிவாயிருத்தல். 3. கூட்டமாகச் சென்று குவிதல். 4. நழுவுதல். “சரிந்த துகில்” (திருவிசை. கரு. 5 : 10). 5. கீழே விழுதல். 'சரிந்த பூவுள” (கம்பரா. அயோத். மந்திரப். 56). 6. பின்னிடுதல். "நேர்சரிந்தான் கொடிக்கோழி கொண்டான்” (திவ். திருவாய். 7: 4: 8). 7. குலைதல். 'சாடிய வேள்வி சரிந்திட” (திருவாச. 14 85). 8. சாதல்.

சரி = 1. மலைச்சாரல். “சிங்கம் வேட்டந் திரிசரிவாய்” (திருக்கோ. 156). 2. மலைவழி. "பெருமலைக ளிடைச்சரியிற் பெரும்பன்றி புனமேய்ந்து” (பெரியபு. கண்ணப்ப. 142). 3. கூட்டம் (பிங்.). 4. வளையல் வகை. “சரியின் முன்கை நன்மாதர்” (தேவா. 118 : 3). தெ. த்சரி.

சுர் - சுருள். சுருளுதல் = 1. வட்டமாக வளைதல். “நீண்டு குழன்று கடைசுருண்டு” (கம்பரா. உருக்காட்டு. 57). 2. சுருங்குதல். 3. சோர்தல். ம., க.சுருள்.

......

சுருள் = 1. சுருண்ட பொருள். “தாமரை மென்சுருள்” (சூளா. நாட்டுப். 18). 2. வெற்றிலைச் சுருள். “சுருளைச் சேடியர் செப்பொடு மேந்த” (சீவக. 197, உரை). 3. ஓலைச்சுருள் மடிப்பு. “சுருள்பெறு மடியை நீக்கி” (பெரியபு. தடுத்தாட். 58),4. மகளிர் காதணிவகை. "செம்பொன் செய்சுருளுந் தெய்வக் குழைகளும்” (கம்பரா. பூக்கொய். 5). 6. திருமணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பரிசு.

சுருள்- சுருளி = 1. ஒருவகை மரம். 2. ஒருவகைச் செடி. 3. ஒரு மலை. ம.சுருள், க.சுருளி,து.சுருள்.

சுருள் - சுருளை = 1. சுருள். 2. சுருண்ட குருத்து. 'வாழையுள் ளெழுசுருளை வாங்கி” (சூளா. சுயம். 87). 3. காதணிவகை. "செம்பொன் செய் சுருளை சுருளை மின்ன” (சூளா. சுயம். 79). க. சுருளெ.