உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1.நல்லார் இயல்பு

9

ஒழுக்கவியற் சொற்கள்

பிறரிடத் தன்புள்ளவர் நல்லார் என்றும், அஃதில்லாதவர் தீயார் என்றும் சொல்லப்படுவர். அன்புள்ள ஒருவர் ஒருசிலர்க்கேனும் நன்மை செய்யாதிருத்தல் இயலாது. அன்பு எங்ஙனமும் வெளிப் படும். அவ் வெளிப்பாடு ஏதேனுமொரு பொருட் கொடையாகவே யிருக்கும்.

“அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”

என்றார் திருவள்ளுவர்.

(குறள்.72)

இவ் வுண்மையை உணர்த்துவது நல்கு என்னும் சொல். இது நன்மையை யுணர்த்தும் நல் என்னும் வேரினின்று பிறந்தது. நல்லவர் கட்டாயம் பிறர்க்கு ஏதேனும் நல்குவர் என்பது இதனாற் குறிக்கப் பெறும் கருத்தாகும்.

2. முனிவர் இயல்பு

பெயர்.

அழகிய குளிர்ந்த அருளையுடைய முனிவர்க்கு அந்தணர் என்று

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்”

என்றார் திருவள்ளுவர்.

(குறள்.30)

இதனால், கைம்மாறு கருதாது எல்லா வுயிர்களிடத்தும் அன்பு செய்தலாகிய அருளில்லாதார்க்கு, அந்தணர் என்னும் பெயர் ஒரு சிறிதும் பொருந்தாதென்பது பெறப்படும்.