உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

vii

முகவுரை

ஒரு மொழிக்குட்பட்ட சொற்களை ஆராயும் சொல்லாராய்ச்சியும், பல மொழிகளை ஒப்புநோக்கும் மொழியாராய்ச்சியும், மேனாட்டாரிட மிருந்து அண்மையில் நாம் அறிந்தவை.

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள்ஈட்டச்சொல்லே"

என்று தொல்காப்பியர்காலத்திலேயே சொல்லாய்ச்சியும் மொழியாராய்ச்சியும் ஓரளவு தமிழ்நாட்டிலிருந்ததேனும், விரிவான முறையிலும் நெறிப்பட்ட வகையிலும் சொன்னூலும்(Etymology), மொழிநூலும் (தஹீதிதூளூதூளூப்பீ) நாம் பெற்றது மேலையரிடமிருந்தே.

சொன்னாலும் அதை யடிப்படையாகக் கொண்ட மொழிநூலும், மாந்தனூல்(Anthropology), உளநூல் (Psychology), வரலாற்று நூல் (History) ஆகிய மூன்றிற்கும் உறுதுணை செய்தலின், பண்பட்ட மக்கள் யாவரும் அவற்றைக் கற்றல் வேண்டும்.

எல்லாமொழிகளும் இயற்கையாய் எழுந்தவை யென்றும், கடவுளைப் போல் தொடக்க மற்றவையென்றும், ஒன்றோடொன்று தொடர்பற்றவை யென்றும், சில மொழிகள் தேவ மொழியென்றும், தேவ மொழியில் வழிபாட்டை நடத்துவது கடவுட் குகந்ததென்றும், தமிழ் வடமொழியினின்று வந்தது அல்லது அதனால் வளம் பெற்றது என்றும், பல பேதைமைக்கருத்துக்கள் பல தமிழர் உள்ளத்தில் வேரூன்றியிருப்பதால், அவற்றைப் பெயர்த்து அவர்களை மொழிநூற் கல்விக்குப் பண்படுத்தும் வண்ணம், இச்சொல்லாராய்ச்சி நூல் வெளிவருகின்றது.

இந்நூலிலுள்ள கட்டுரைகள், ஆங்கிலத்தில் திரெஞ்சுக் கண்காணியார் (Trench) எழுதியுள்ள சொற்படிப்பு (On the study of Words) என்னும் கட்டுரைத் தொகுதியின் போக்கைத் தழுவி எழுதப் பெற்றவை.

என்னைப் பல்லாற்றானும் ஊக்கி, இந்நூல் விரைந்து இயல்வதற்குக் காரணமாயிருந்த சேலம் நகராண்மைக் கல்லூரித் தலைவர் திரு. அ.இராமசாமிக் கவுண்டர்,M.A.,LT., அவர்கட்குயான் என்றும் கடப்பாடையேன்.

"குணநாடிக் குற்றமும் நாடி யவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்”

ஞா. தேவநேயன்

சேலம். 29.12.48