உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வழக்கற்ற சொற்கள்

73

மக்கள் வரவரக் கலைநாகரிக வளர்ச்சியடைந்து வருவதால், அன்றன்று தோன்றும் புதுப்புது கருத்துகட்கெல்லாம் உடனுடன் சொற்கள் அமையப்பெறல் வேண்டும். ஆங்கிலத்தில் அது நடைபெற்று வருகின்றது. ஆனால், தமிழிலோ அஃதில்லை. அதோடு இருந்த சொற்களும் பல இறந்துவிட்டன. உலகவழக்கிறந்த சொற்கள் செய்யுள் அல்லது நூல்வழக்கிலும், நூல்வழக்கிறந்த சொற்கள் அகராதியிலும், இடம் பெறுவதுண்டு. தமிழில் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு அகராதியும் இவ் விருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு விரிவான அகராதியும் ருந்ததில்லை. ஆதலால், இதற்குமுன் வழக்கிறந்த சொற்களெல்லாம் மீளா இருளில் மூழ்கிவிட்டன. அவைபோக எஞ்சியவற்றுள்ளும் பல வழக்கிறந்துள்ளன. அவை வழக்கற்றமைக்குக் காரணம் அவற்றை வழங்காமையே.

உயிருள்ள மொழிக்குப் பற்றுக்கோடு மக்கள் நாவே. நாவில் இடம் பெறாதவை பாவில்மட்டும் இடம் பெறும். அப் பாவும் மொழிப்பற்றற்றார் இயற்றுவதாயின், அதிலும் அவை இடம் பெறா.

தமிழர் பல தமிழ்ச்சொற்களை வழங்காமைக்குக் காரணம், தம்மையும் தம் மொழியையும்பற்றி அவர்கள் கொண்டுள்ள தாழ்வுணர்ச்சியே. வடமொழி தேவமொழியென்றும், அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும், தவறான கருத்துகளைத் தமிழர் கொண்ட தினின்றே, தமிழின் பெருமை குலையத் தொடங்கிவிட்டது. ஆங்கிலம் அரசியன்மொழி என்ற காரணத்தினாலேயே, தமிழர் அதைப் போற்றவும், தமிழைத் தூற்றவும் தலைப்பட்டாராயின், தேவர் பேசுவதாகவும் தேவதேவன் விரும்புவதாகவும் கருதப்பட்ட வடமொழியை அவர்கள் எத்துணைத் திருப்பற்றோடு போற்றி யிருத்தல் வேண்டும்!

இன்றும், 'சோறு' என்பது தாழ்வென்பதும், 'சாதம்' என்பது உயர்வென்றும், 'நீர்' என்பது இழிவென்றும், 'ஜலம்' என்பது ஏற்றமென்றும் கருதுபவர் எத்துணையர்! என்றும், வழக்குற்ற சொற்கள் எளிதுணர் பொருளவாயும், வழக்கற்ற சொற்கள் அரிதுணர் பொருளவாயும் இருத்தல் இயல்பே. வழக்கற்ற சொற்கள் எளிதாய்ப் பொருளுணர்த்தாமைக்குக் காரணம், அவற்றின் வழக்கற்ற தன்மையேயன்றி, அவற்றில் இயல்பாயமைந்துள்ள ஏதேனுமொரு குறையன்று. நீண்டகாலமாக உறவாடாத மக்கள் அயலாராகத் தோன்றுவதுபோன்றே, நீண்டகாலமாக வழங்காத சொற்களும் அருஞ் சொல்லாய்த் தோன்றுகின்றன.