உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




vi

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அமைதிகள் தமிழுக்கேற்றவாறு மாற்றிக் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு: He who steals எனச் சுட்டுப்பெயரும் அதைத் தழுவிய பெயரெச்சக் கிளவியமுமாக (Adjective clause) வரும் ஆங்கிலச் சொற்றொடர், தமிழில், திருடுகிறவன் என வினையாலணையும் பெயராதல் காண்க.

ஒரு பாடப்புத்தகத்தை ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு அல்லது தேர்விற்குத் தகுந்ததாகக் கூறுவதே முறையாயினும், உயர்நிலைப் பள்ளி மாணவர் பள்ளியிறுதி (S.S.L.C) தேறியவுடன் கல்லூரி மாணவராய் விடுதலானும், தமிழிலக்கணவறிவைப் பொறுத்தமட்டில் உயர்நிலைப்பள்ளி மாணவரும், கல்லூரி மாணவரும் பெரும்பாலும் ஒரே தரத்தினர ாயிருத்தலானும், தமிழ்க் கட்டுரை யிலக்கணத்தைப் பற்றிய பல செய்திகள் அவ்விரு சாரார்க்கும் பொதுவாய்த் தெரிந்திருக்க வேண்டியிருத்தலானும், இந்நூல்அவ்விருசார் மாணவர்க்கும் பொதுவானதென்பது பொருத்த மாகும். ஆயினும், எழுவாய் பயனிலை செயப்படுபொருள் தொகுமிடங் களைக் கூறும் பகுதியும், கதம்ப வாக்கிய வியல்பைக் கூறும் பகுதியும், சிறப்பாகக் கல்லூரி மாணவர்க்கு உரியனவாகக் கூறுவது தக்கதாகும்.

இந்நூல், தொடரியல், மரபியல், கட்டுரையியல் என மூவியல்புகளை யுடையது; விரிவுபாடு கருதி இருபாகமாக வெளியிடப் பெற்றுளது. முதற்பாகம் முதலியலையும், இரண்டாம் பாகம் ஏனையியல்களையும் கொண்டவை.

இந்நூல் ஒரு புது முறையில் முதன்முதல் எழுதப்பெற்றதாகலின், இதிலுள்ள குற்றங்குறைகளை அறிஞர் எடுத்துக்காட்டின், அவற்றை அடுத்த பதிப்பில் நன்றியறிவுடன் திருத்திக் கொள்வேன்.

இந்நூலிலுள்ள இயற்பிரிவுகளின் உட்பிரிவுகளும் விதிகளும் மறுபதிப்பில் எண்ணீடு பெறும்.

சேலம்,

4.11.1950

ஞா.தேவநேயன்