உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நாகரிகம் என்னும் சொல்விளக்கம்

நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர் + அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதல் முதல் நகர நிலையிலேயே நாகரிகமடைந்துள்ளனர். அதனால் நகரப் பெயரினின்று நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங் கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிகமில்லாதவன் நாட்டுப் புறத்தான் என்றும் பட்டிக் காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க. நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிகமுள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக.

ஆங்கிலத்திலும், நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே. L. Civitas, city or city - CIVIS citizen, L. civilis -

E. civil civilize.

நகரங்கள் முதன் முதல் தோன்றியது உழவுத் தொழிற்குச் சிறந்த மருத நிலத்திலேயே. உழவுத் தொழிலும் நிலையான குடியிருப்பும் ஊர்ப்பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்குப் பெரிதும் துணை செய்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், பதினெண் பக்கத் தொழில்களும், பிறதொழில் செய்வார்க்கும் போதியவுணவும், வாணிகமும் ஏற்பட்டன. நிலையாகக் குடியிருப்பதனால் உழவன் குடியானவன் என்னப் பெற்றான். இல்வாழ்வான் என்று திருவள்ளு வராற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றவனும் உழவனே. இல்வாழ் வானைக் குறிக்கும் husbondi (house-dweller) என்னும் பழ நார்வேயச் சொல்லினின்று உழு அல்லது பயிர் செய் என்று முன்பு பொருள்பட்ட husband என்னும் ஏவல் வினைச்சொல்லும், உழவனைக் குறிக்கும் husbandman என்னும் பெயர்ச் சொல்லும், உழவுத் தொழிலைக் குறிக்கும் husbandry என்னும் தொழிற் பெயரும், ஆங்கிலத்தில் தோன்றியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது. நிலையான குடியிருப்பால் ஒழுக்கப் பொறுப்பும், ஊர்ப் பெருக்கமும் ஆட்சியமைப்பும் ஏற்பட்டன. இதனால், மருத நிலமும் உழவுத் தொழிலும் எங்ஙனம் நாகரிகத்தைத் தொற்றுவித்தன என்பது தெளிவாகும்.