உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

ix

முகவுரை

பண்டைத் தமிழ் அரசியலைப்பற்றிப் பல அறிஞர் பற்பல புத்தகங்கள் தமிழில் எழுதியிருப்பினும், அவை யாவும் அதனைப் பற்றி மாணவரும் பிறரும் போதிய அளவு தெரிந்து கொள்வதற்கு வேண்டுமளவு விரிவாயிராமையின், இந்நூலை இலக்கியம் கல்வெட்டுச் செய்தி உலகவழக்கு ஆகிய முந்நிலைக் களத்தினின்றும் தொகுத்து எழுதலானேன்.

சேரசோழ பாண்டியத் தமிழரசு, வரலாற்றுக் காலத்துக்கு முன்புதொட்டு 17ஆம் நூற்றாண்டுகாறும் நிலைத்திருந்தமையின் இந்நூலும் அக்கால முழுமையுந் தழுவும். இந்நூற்குரிய சான்று களிற் பல, பிற்காலத்தவராயினும், மூவேந்தர் ஆட்சியும், தொன்று தொட்டு இறுதிவரை பெரும்பாலும் டையறாதும் ஒரே நெறிப்பட்டும் இருந்ததாகத் தெரிகின்றமையின், அச்சான்றுகள் முற்காலத்திற்கும் செல்லுமென்பது ஊகித்தறியப்படும்.

வடமொழியாளர் தென்னாடு வந்தபின், தமிழ்மக்கள் கருத்தும் மொழியும் ஓரளவு வேறுபட்டுவிட்டதனால் அவ்வேறுபாட்டை யுணர்த்தற்கு "மக்கள் நிலைமை" "மொழி நிலைமை" என ஈரதிகாரங்கள் பின்னிணைப்பில் வைக்கப் பெற்றுள

ஏதேனும் ஒரு காலத்தின் சிறப்பியல்பு விதந்து குறிக்கப் பெறுதல் நன்றென்று தோன்றியவிடத்து, அது குறிக்கப் பெற்றுளது. அங்ஙனமே ஒரு நாட்டியல்பும்.

படிப்போர்க்குத் தெளிவாயிருத்தற் பொருட்டு, பண்டைத் தமிழரசியற் செய்திகள் பல்வேறு தலைப்பாகப் பகுக்கப்பட்டிருத் தலின், இரண்டோரிடத்துக் கூறியது கூறல் போல் தோன்றும் செய்திகள், வழிமொழிதலேயன்றிக் கூறியது கூறலாகா என்பதை, அறிஞர் அறிந்துகொள்வர் என நம்புகின்றேன்.

ஐயுறவான இடங்களில் மட்டும் இலக்கியச் சான்றுகள் காட்டப் பட்டுள; ஏனையிடங்களில் அவை விரிவஞ்சி விடப்பட்டுள.

இந்நூலைப் படிப்போர்க்குப் பழந் தமிழரசியலைப் பற்றித் தெளிவான அறிவு பிறக்குமென்று கருதுகின்றேன்.

என்றுந் திருத்தம் இயம்பும் அறிஞரின்

நன்றி யறிவேன் நனி.

சேலம்

18.12.1951

ஞா.தேவநேயன்