உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

பழந்தமிழாட்சி

(5) கள்ளக் கையெழுத்து இட்டோர்.

(6) குற்றங் காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டோர்.

(7) கையூட்டுக்(லஞ்சம்) கொண்டோர்.

(8) ஊர்க் கண்டகர்.

(9) முறைகெட்ட மணம் புரிந்தோர்.

(10) துணிச்சலுள்ளோர்.

(11) உண்ணத்தகாததை உண்டோர்.

(12) இப் பதினொரு சாராரின் நெருங்கிய உறவினர்.

(13) கீழ்மக்களோடு கூடி யுறைந்து கழுவாய் (பிராயச்சித்தம் செய்யாதோர்.

விதிகள் படிக்கப்பட்டு முடிந்தவுடன் தேர்தல் தொடங்கும். குடவோலையாளர் (வாக்காளர்) தகுதியாளர் பெயர்களை எழுதித்தரும் குடவோலைகளைக் குடும்பு வாரியாகக் கட்டி உள்ளிடுவதற்கு ஒரு குடமும், அதிலிருந்து ஒவ்வொரு கட்டாய் எடுத்துக் குலைத்து உள்ளிட்டுக் குலுக்குவதற்கு ஒரு குடமுமாக, இரு வெறுங்குடம் கூட்ட நடுவில் வைக்கப்பட்டிருக்கும். கூட்டத்தி லுள்ள நம்பிமாருள் முதியார் ஒருவர் எழுந்து நின்று, குடவோலைக் கட்டுகளையெல்லாம் இட்டுவைக்கும் குடத்தையெடுத்து, அதில் ஒன்றுமில்லை யென்று எல்லார்க்குந் தெரியம்படி காட்டுவர்.

பின்னர் ஒவ்வொரு குடும்பாரும், தத்தம் குடும்பில் தாந்தாம் விரும்பிய பெயரை வரைந்து கொடுத்த ஒலைச்சீட்டுகளையெல் லாம், குடும்புவாரியாகச் சேர்த்துக்கட்டி, ஒவ்வொரு கட்டிலும், அவ்வக் குடும்பின் பெயர் பொறித்த வாயோலை பூட்டி, வெறுமை காட்டப்பட்ட குடத்திற்குள் இடுவர். பின்னர், அம் முதியார் நன்மை தீமையறியாத ஒரு சின்னஞ்சிறு பிள்ளையைக் கொண்டு அக் குடத்திலிருந்து ஒரு கட்டை யெடுத்துக் குலைத்து, முன்போன்றே வெறுமை காட்டப்பட்ட இன்னொரு குடத்திற்குள் இட்டு நன்றாய்க் குலுக்கியபின், மீண்டும் அப் பிள்ளையைக் கொண்டே அதிலிருந்து ஒரு குடவோலைச் சீட்டை யெடுத்துக் கரணத்தான் கையிற் கொடுப்பர். அவன் அதைத் தன் வலக்கை விரலைந்தையும் விரித்து வாங்கி, அதில் வரையப்பட்டுள்ள பெயரை அனைவர்க்குங் கேட்கும்படி உரக்கப்படிப்பான். அங்ஙனமே அங்குள்ள நம்பிமார் அனைவரும் அதை வாங்கிப் படிப்பர். அதன் பின் அப் பெயர் கரணத்தானால் ஓர் ஓலையில் குறிக்கப்பெறும். இங்ஙனமே ஏனைக் கட்டுகளினின்றும் ஒவ்வொரு குடவோலை எடுக்கப்பட்டு, அதில் வரைந்துள்ள பெயர் உடனுடன் குறிக்கப்பெறும். எல்லாப் பெயருங் குறிக்கப்பெற்றபின், வாரியப் பகுப்பு நடைபெறும்.