உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

23

பாவு. பாபாம் -பாம்பு. நல்ல பாம்பு தன் படத்தைப் பரப்புவதால் பாம்பு எனப்பட்டது. அது பொதுப் பெயரான பின், குலமரத்தை “நன் மரம்” என்றாற் போலக் குலப் பாம்பை நல்லபாம்பு என்றனர்.

நாகம் என்பதே பாம்பின் பொதுப் பெயர். நகர்வது நாகம். ஒ.நோ: OE. snakan = to creep; snak - snake.

நாகம் -வ. நாக (naga). நக (naga) என்னும் சொல்லினின்று திரித்து, மலையிலிருப்பது நாகம் என்று வடமொழியாளர் கூறுவது, பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தி. நச்சுப் பாம்புகளுட் பெருவழக்காக மக்களில்லங்களை யடுத்து வாழ்வது, நல்ல பாம்பே யாதலால், நாளடைவில் நாகம் என்னும் பொதுப்பெயர் நல்ல பாம்பின் சிறப்புப் பெயருமாயிற்று. "நாகப் பாம்பு பைத்தனைய" (சீவக. 561 ). “நன்மணி யிழந்த நாகம் போன்று" (மணிமே. 25: 195).

முடிநாகராயர்,இளநாகனார், நன்னாகனார், நாகனார், நாகன் தேவனார் என்னும் பண்டைப் புலவர் பெயர்களும், நாலை கிழவன் நாகன் என்னும் கடைக்கழக வேள் பெயரும், நாகப்பன் நாகராசன் நாகலிங்கம் நாகம்மை நாகமுத்து என்னும் இற்றை இயற்பெயர் களும், நாகபடம்(பாம்படம்) நாகமுடிச்சு நாகர் நாகவொத்து என்னும் பெண்டிர் அணிப்பெயர்களும், குறிப்பாகவும்; சில அரச மரத்தடியிலும் மேடைமேலுமுள்ள, ஐந்தலை நாகமும் எழுதலை நாகமும் இருநாகப் பிணையலும் ஆகியவற்றின் உருவம் செதுக்கிய கற்கள், வெளிப்படையாகவும்; பண்டை நாக வணக்கத்தைத் தெரி விக்கும். நெல்லை மாவட்டத்தில் சங்கரநயினார் கோவிற் பக்கத்தில், பாம்புக் கோவில் சந்தை என்றொரு புகைவண்டி நிலையமும் உள்ளது. இன்றும் நாகக் கற்களை வணங்கும் மாந்தர் ஒருசிலர் உளர்.

நல்ல பாம்புப் புற்றோ வளையோ உள்ள வீடுகளில், நாள் தோறும் அல்லது செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பாலும் பழமும் படைப்பது வழக்கம்.

வதி தெய்வம்

பண்டை மாந்தர், ஒவ்வொரு மலையிலும் சோலையிலும் இயற்கை நீர்நிலையிலும், ஒவ்வொரு தெய்வம் நிலையாக வதிந்த தாகக் கருதி, அவற்றையும் வணங்கி வந்தனர்.

குறிஞ்சித் தெய்வம்

ஐந்திணைத் தெய்வம்

குறிஞ்சிநில மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன்(சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினர். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு.