விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை." (நாலடி. 226)
808. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்க நட்டார் செயின்.
(இ-ரை.) கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - பழைமையான நண்பர் செ-த தவற்றைத் தாமாகவன்றிப் பிறர் சொன்னாலும் பொருட்படுத்தாத நட்புரிமை யறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அந் நண்பர் தவறுசெ-யின் அந் நாள் நன்னாளாம்.
'கேள்' வகுப்பொருமை. தவறுகள் இவ் வதிகார முதற் குறளுரையிற் கூறப்பட்டன. கேட்டல் கேட்டு அதற்குத் தக்கன செ-தல். 'கெழுதகைமை வல்லார்' ஒருசொற்றன்மைப்பட்ட கூட்டுப்பெயர். தவறு செ-யும் நாள் நட்புரிமையை வெளிப்படுத்துதலின், அறிவுடையன்பர் கண்ணோட்டம்பற்றி அதை மகிழ்ச்சி மனப்பான்மையோடு நோக்குவர் என்பதாம்.
809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையு முலகு.
(இ-ரை.) கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை கெடாது பழைமையாக வந்த நட்பையுடையாரின் உறவை; விடார் - அவர் செ-த தவறுபற்றி விடாதவரை; உலகு விழையும் - உலகம் விரும்பும்.
கேண்மையை விடுதற்கு இருக்கக்கூடிய கரணியம் வருவித் துரைக்கப்பட்டது. உலகம் விரும்புதலாவது புகழ்ந்து போற்றுதலும் அவரோடு நட்புக் கொள்ளுதலும். 'கெடா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். 'கெடாஅ', 'விடாஅர்' இசைநிறை யளபெடைகள். 'கெடாஅர்' என்பது மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர் கொண்ட பாடம். 'நட்பிற் கெடாரா-' என்பது மணக்குடவர் உரை. காலிங்கர் 'விடாஅர்' என்பதையும் இங்ஙனமே முற்றெச்சமாக்கி 'ஒருகால் ஒழியாதே' என்று பொருளுரைப்பர்.
'உலகு' ஆகுபெயர்.
810. விழையார் விழையப் படுப் பழையார்கட்
பண்பிற் றலைப்பிரியா தார்.