40
திருக்குறள்
தமிழ் மரபுரை
(இ-ரை.) அடுத்தது காட்டும் பளிங்குபோல் - தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் நிறத்தையும் தன்னுட் காட்டும் கண்ணாடி போல; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவர் மனத்தில் தோன்றிய கருத்தை அவர் முகமே காட்டிவிடும்.
'அடுத்தது' ஆகுபொருளது. ஒரு கருத்து ஒருவர் உள்ளத்தில் முன்னில்லாது புதிதா-த் தோன்றிய மிகையாதலின், 'கடுத்தது' எனப்பட்டது. கடுத்தல் மிகுதல். இவ் வுவமையில், தொடர்பினால் ஒன்றையொன்று காட்டுதல் பொதுத் தன்மையாம். பளிங்கு புறப்பொருளை அகத்திற் காட்டுவது; முகம் அகப் பொருளை புறத்திற் காட்டுவது.
707. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்.
(இ-ரை.) உவப்பினும் காயினும் தான் முந்து உறும் - ஒருவர் இன்னொரு வரை விரும்பி மகிழ்ந்தாலும், வெறுத்துச் சினந்தாலும், தான் அவற்றை முன்னறிந்து அவற்றைப் பிறர்க்கு அறிவிப்பதில் வாயினும் முற்பட்டு நிற்றலால்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகத்தைப்போல் அறிவு மிக்க வேறு வுறுப்பு ஏதேனும் உண்டோ? இல்லை.
ஒருவரின் விருப்பு வெறுப்புகளை அவர் வா-திறந்து சொல்லுமுன், அவர் முகமே முறையே மலர்ந்தும் சுருங்கியும் தெரிவித்துவிடுதலால், 'முகத்தின் முதுக்குறைந்த துண்டோ' என்றார். இங்கு முந்துறுதற் போட்டி முகத்திற்கும் வாக்கும் இடைப்பட்டதாம். முது = முதுமையால் உண்டாகும் அறிவு . முது - முதுக்கு. ஒ. நோ: மெது - மெதுக்கு. முதுக்கு உறைதல் = அறிவு தங்குதல், அறிவடைதல். உவப்பான் கா-வான் இயல்புகள் அவர் முகத்தின் மேல் ஏற்றப்பட்டன, உணர்வான் செயல் அவன் கண்ணின்மேல் ஏற்றப் பட்டதுபோல் (705).
708. முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.
(இ-ரை.) இதற்கு ஈருரைகள் உள:
1. அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - புறக்குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் உள்ளத்தை நோக்கி அதிலுள்ள கருத்தை அறியவல்ல அமைச்சரை ஆட்சித் துணையாகப் பெற்றால்; முகம் நோக்கி நிற்க அமையும் அரசன் அவ் வமைச்சரின் முகத்தை நோக்கி எதிரே