42
திருக்குறள்
தமிழ் மரபுரை
நோக்கு, வடிவு, சொல், செயல், கூட்டுறவு, பொருள், பிறர் கூற்று முதலியனவாக, ஒருவர் மற்றொருவர் கருத்தை அளந்தறியும் வழிகள் பலவாயினும், அவற்றுள் நோக்கு வேறுபாட்டைக் கொள்ளும் கண்ணே, அகக் கண்ணாகிய மனத்தொடு நெருங்கிய தொடர்புடையதா-, அடுத்தது காட்டும் பளிங்குபோல் உள்ளக் கருத்தை உடன் காட்டுவதாயும் எளிதில் மறைக்கக் கூடாததாயும், நோக்கல்லாத பிறவெல்லாம் மனத்தொடு தொடர் பற்றனவாயும் எளிதில் மறைக்கக் கூடியனவாயும் இருத்தலால், கண்ணைப் பிரித்துக் கூறினார். நோக்கு, குறிப்புள் ஒரு கூறா- அடங்கும். குறிப்பு உடல் முழுவதையுந் தழுவுமேனும், முகக் குறிப்புச் சிறந்ததும் அதன் ஒரு கூறான கட்குறிப்புத் தலைசிறந்தததுமாகும். வடிவில் ஆடையணியும் அடங்கும். அறிவின் நுண்மை அறிவையுடையர்மேல் ஏற்றப்பட்டது. 'கண்' ஆகுபெயர்.
"இனி, அலைக்குங்கோ லென்று பாடமோதி, நுண்ணியமென்றிருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது கண்ணென வுரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற் குறிப்பறிகவென்பது கருத்தாக்குவாரு முளர்" என்று பரிமேலழகர் கூறியிருப்பதால், 'அலைக்குங்கோல்' என்றும் பாடவேறுபா டிருந்தமை அறியப்படும். இவ் வேறுபாடு மணக்குடவ பரிப்பெருமாள் பரிதி காலிங்கர் உரைகளிற் காணப்படாமையால், அவரல்லாத பிறரதாகும். இவ் விருகுறளாலும் குறிப்பறிதற்கு முகத்திற் சிறந்த வுறுப்புக் கண்ணென்பது கூறப்பட்டது.
அதி. 72 - அவையறிதல்
அதாவது, அமைச்சரும் தூதரும் அரசனோடிருக்கும் அவையின் இயல்பை அறிதல். தம் அரசனோடுள்ள அவையை ஏற்கெனவே அறிந் திருப்பராதலால், இது சிறப்பாக வேற்றரசரின் அவையியல்பை அறிதலைப் பற்றியதாம்.
அவையினர் ஒற்றரல்லாத ஐம்பெருங் குழுவினரும் புலவரும் நண்பருமாவர். நல்லவை அல்லது நிறையவை யென்றும், புல்லவை அல்லது குறையவையென்றும், அவை இருதிறப்படும். அவற்றுள் முன்னது பேரறிஞர் கூட்டமும் பின்னது சிற்றறிஞர் கூட்டமுமாகும். நல்லவைக்கு வல்லவை, நுண்ணவை என்றும் பெயர்.இனி,சொல்வாரொடு ஒப்புநோக்கி உயர்வு. ஒப்பு, தாழ்வு எனவும் அவை முத்திறப்படும்.
வேற்றரசனிடத்தில் ஒன்றைச் சொல்வோர்க்கு அவன் குறிப்பறிதலேயன்றி அவன் அவையின் இயல்பை அறிதலும் வேண்டுதலின், இது குறிப்பறிதலின் பின் வைக்கப்பட்டது.