உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46

திருக்குறள்

தமிழ் மரபுரை


தளர்ந்த அற்றே - வீடுபேற்றின் பொருட்டுத் துறவுநெறிக்கண் நெடிது ஒழுகினவன் அந் நெறியினின்றும் தவறி வீழ்ந்ததை யொக்கும்.

ஆற்றின் நிலை தளர்தலாவது, அருள்மேற்கொண்டு கொலை தவிர்ந்து கடுந்தவஞ்செ-து ஐம்புலனு மடக்கியவன் கூடாவொழுக்கத்துட்படுதல். அத்துணைக் கேடானதே நல்லவையில் வல்லான் வழுப்படல். "ஆனைக்கும் அடிசறுக்கும்" என்பது, நாப்பிசகைக் காக்குமே யன்றி அறிவுப் பிசகைக் காவாது. கூடாவொழுக்கத்தான் பயனிழந்து இகழப்படுவது போன்றே, வழுப்பட்ட வல்லானும் பதவியிழந்து இகழப்படுவான் என்பதாம். ஏகாரம் தேற்றம்.

717. கற்றறிந்தார் கல்வி விளக்குங் கசடறச்
சொற்றெரிதல் வல்லா ரகத்து.

(இ-ரை.) கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுவின்றிச் சொற் பொழிவுகளை ஆராய வல்ல அறிஞரவைக்கண் உரை நிகழ்த்தின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையுங் கற்று அவற்றின் பொருளை அறிந்தவரின் கல்வி விளங்கித் தோன்றும்.

சொல் என்றது சொற்பொழிவை. உரை நிகழ்த்தின் என்பது அவா - நிலையால் வந்தது.

"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே

பாம்பறியும் பாம்பின கால்."

(பழ. 7)

718. உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியு ணீர்சொரிந் தற்று.

(இ-ரை.) உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்த வேண்டாது தாமே பொருள்களை யுணரவல்ல அறிவுடையா ரவைக்கண் கற்றார் ஒன்றைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்த அற்று - தானாக வளரும் பயிர் நின்ற பாத்திக்குள் நீரை வார்த்தாற் போலும்.

தானே வளரும் அறிவு மிக விரைந்து வளரும் என்பதாம். இவ்விரு குறளாலும், ஒத்தாரவைக்கண் கற்றோர் தமக்குரிய இலக்கிய நடையிற் பேசுக என்பது கூறப்பட்டது.