(இ-ரை.) நிலைமக்கள் சால உடைத்து எனினும் - போரிற் பின்வாங் காது நிலைத்து நிற்கும் மறவரை மிகுதியாகக் கொண்டிருப்பினும்; தலை மக்கள் இல்வழித் தானை இல் - தனக்குத் தலைவராகிய வயவர்(வீரர்) இல்லா விடத்துப் படை நிற்காது.
படையைப் பயிற்றவும் போருக்கு நடத்திச் செல்லவும் போர்க்களத்தில் ஏவிப் போர் செ-விக்கவும், தலைவர் இன்றியமையாமையால், 'தலைமக்க ளில்வழி யில்' என்றார். இதனால், படைத்தலைவரின் தனிச்சிறப்புக் கூறப் பட்டது. தலைவனில்லாப் படை தலையில்லா வுடம்பு போன்ற தென்பது கருத்து.
அதி. 78 - படைச்செருக்கு
அதாவது, படையின் மறமிகுதி. அதிகார முறையையும் இதனால் விளங்கும்.
771. என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்.
(இ-ரை.) தெவ்விர் - பகைவீர்; என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - இதற்கு முன்பு என் தலைவனது வலிமையறியாது அவனுக்கு எதிர்நின்று போரேற்று அவன் வேலாற் கொல்லப்பட்டுப் பின்பு நடுகல்லில் நின்ற மறவர் பலராவர்; என் ஐ முன் நில்லன்மின் - ஆதலால், நீவிரும் அவ்வாறு நடுகல்லில் நில்லாது உம் உடலோடு நிற்க விரும்பின், என் தலைவனெதிரே போரேற்று நிற்றலைத் தவிர்க.
இது ஒரு மறவன் தன் தலைவன்மேல் வைத்த அன்புப் பெருக்கால், தன் மறத்தையும் தான் சேர்ந்த படையின் மறத்தையும் அவன்மேலேற்றிக் கூறியவாறு. படையின் வெற்றி படைத்தலைவன் வெற்றியாகக் கூறப்படுவது மரபாதலால், இங்ஙனங் கூறினான் என்க. போரில் இறந்த மறவனுக்குக் கல்நட்டு, அதில் அவன் பெயரும் பெருமையும் பொறிப்பது பண்டை மரபு. அச் செ-தி பொருளிலக்கணத்தில் வெட்சி என்னும் புறத்திணையின் பிற்பகுதியாகிய கரந்தையைச் சேர்ந்த துறையாகும் (தொல், பொருள். புறத்.5).
அரசனும் தலைமைப் படைத்தலைவனாகப் போருக்குச் செல்வது பண்டை வழக்கமாதலால், இங்கு 'ஐ' என்றது அங்ஙனஞ் சென்ற அரசனை யுங் குறிக்கும்.