உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நடுவணரசின் கடமை

183

இந்தியர், சிறப்பாகத் தென்னாட்டார், அந் நாடுகட்குச் சென்று வெயிலிற் காய்ந்தும் மழையில் நனைந்தும் பனியில் நடுங்கியும் பகலில் அட்டையினாலும் இரவில் உலங்கினாலும் பூச்சிகளி னாலுங் கடியுண்டும், இரவும் பகலும் நெற்றியின் வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு, காடுவெட்டிக் கரம்பு திருத்தி நீர்பாய்ச்சி, நெல் வயல்களும் கரும்புப் பண்ணைகளும் குளம்பித் (coffee) தோட்டங்களும் கொழுந்துத் (tea) தோட்டங் களும் கனிமரத் தோப்புகளும் தோற்றுவித்து, வளம்பெருக்கி அவர்களை வாழ்வித்து வணிகத் தையும் வளர்த்துதவி, தம் நாடு போன்றே அங்குத் தங்கிப் பிள்ளைபெற்றுப் பேரன் பேர்த்தியெடுத்து மண்ணொடு மண்ணாய்ப் போனபின், நாலாம் ஐந்தாம் தலைமுறையில் அவர்கள் வழியினரை, அங்குள்ள அரசுகள் நன்றி கொன்று துரத்தியதுமன்றி, அவர்கள் உடைமையுரிமைகளையும் பறி முதல் செய்து கொண்டன.

உகாண்டாவின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் அடிப்படை யாயிருந்தது, அங்கு ஆங்கிலர் அமைத்த இருப்புப்பாதையே. அதிற் பணிபுரிந்த மக்கள் அனைவரும் பஞ்சாபியரே. மாந்த னுண்ணி (மடங்கல்)களால் (man-eaters) அவர்கள் பட்ட பாடும் கெட்ட கேடும் ஏட்டிலடங்கா ; எண்ணத் தொலையா. அவர்கள் அரத்தவுழைப்பின் பயனை இன்று இனிது நுகரும் இடி அமீன், தன்னை வாழ்வித்தவரின் வழியினரை வறுங்கைய ராக விரட்டியடித்தது, அவர்களின் முன்னோரையுண்ட அரிமாக் கள் செயலினும் அறக்கொடிதாகும்.

இந்திய அரசு இவற்றையெல்லாம் ஆய்ந்துபார்த்து, அந் நன்றிகெட்ட அரசுகளொடு போராடி, இயலுமாயின் வெளி யேற்றப்பட்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளவும், இயலா விடின் அவர் இழந்தவற்றிற்கெல்லாம் ஈடு செய்யவும், இடை விடா முயற்சி செய்தல் வேண்டும்.

இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலுந் தமிழரா யிருத்தலின், அவர்கள் உரிமையைப் பேணிக்காத்தற்கு, அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் (Head of the Indian Embassy) இனப்பற்றுள்ள தமிழராகவேயிருத்தல் வேண்டும்.

ஆங்கிலர் நீங்கும்வரை யாழ்ப்பாணம் தனிநாடாக இருந் தமையால் அந்த நிலைமை மீளவேண்டும்; இன்றேல், தமிழும் சிங்களத்தோ டொத்த ஆட்சி மொழியாதல் வேண்டும்.