உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

3

விட்டதனால், கிறித்துவிற்குப் பின் ஆங்கிலர் வரும்வரை தமிழாட்சி தமிழர் கையில் இருந்த தில்லை. ஆரியர் வருகைக்கு முந்தின, தமிழுக்கு உயிர்நாடியான மூல முதுநூல்களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. அகத்தியம், தமிழ்ப் பரதம் முதலிய, ஆரியர் வருகைக்குப் பிற்பட்ட நூல்களும் இன்றில்லை. கல் வெட்டுகள், கொச்சைச் சொற்களும் வேண்டா வட சொற்களும் விரவியும், வரிவடிவு பிழைத்தும், வடவெழுத்துப் புகுத்தியும், இலக்கணமின்றியும், இடையிடைத் தமிழ்ப் புலவர்க்கும் பொருள் தெரியாவாறு மணிப்பவள நடையிலும் பொறிக்கப் பட்டு வந்தன.

பிராமணர் நிலத்தேவரென்றும், அவரது இலக்கியமொழி தேவ மொழியென்றும், நம்பப்பட்டுவிட்டதனால் தமிழரசர் காலத்திலேயே தமிழ்ப்புலவர் தமிழ்க்கேட்டைத் தட்டிக்கேட்க இடமில்லாது போயிற்று. இவ் விழிநிலைமை தமிழரசொழிந்து அயலரசுகள் தோன்றியபின் முற்றி முதிர்ந்து, ஆங்கிலராட்சி யிலேயே நீங்கத் தொடங்கிற்று. ஆதலால், பிற்காலக் கல்வெட்டு களைக்கொண்டு தமிழின் தொன்மையை அறிவது, ஆழியை நாழி கொண்டு அளப்பது போன்றதே.

1. குடும்பத்தலைவன்

மக்கட்டொகுதிக்கு அடிப்படை யலகாயிருப்பதும், உலகில் முதன்முதல் தோன்றிய கூட்டொழுங்கும் குடும்பமே. கட்டுப் பாடின்றி ஒருவனுக்கு ஒரு மனைவியோ பல மனைவி யரோ இருந்த முதற் காலத்தில், பிள்ளை பிறக்கும்வரை கணவனாகவும், அதன்பின் கணவனுந் தந்தையுமாகவும் இருந்த குடும்பத் தலைவனே தன் குடும்பத்தை ஆண்டுவந்தான். புதல்வரும் புதல்வியரும் பிறந்து பெரியோராகி மணந்து பல்குடும்பமான பின், கூட்டுக் குடும்பத் தலைவனான பாட்டன் அல்லது பூட்டன் (பாட்டனின் தந்தை) அல்லது சேயான் (பூட்டனின் தந்தை) ஆண்டு வந்தான்.

இக்காலத்தும் ஒருசிலர் இருநூறாண்டும் மேலும் வாழ்வதால், இருவளமும் மிக்க தொடக்கக் காலத்தில் மாந்தர் சிலர் நாலைந்து தலைமுறை நீடித்திருந்தனர் என்பதில், எள்ளளவும் ஐயுறவிற் கிடமில்லை.

2. குடித்தலைவன்

கூட்டுக்குடும்பங்கள் குலைந்து தனித்தனிக் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டபின், குடிமுதியனே குடித்தலை வனாக ஆண்டுவந்தான்.