உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

அடிமையாக வேண்டுமென்று கருதுவதும் கழிபெரு மடமை யாகும். இந்தியா அமெரிக்காவின் மக்களாட்சியை மேற்கொண் டதனால் அமெரிக்காவிற்கு அடிமைப்பட்டு விட்டதோ? இங்கிலாந்து போன்று ஈரானும் கோவரசு நாடாதலால், முன்னதற்குப் பின்னது அடிமைப்பட்டு விடுமோ? விடாதே! ஆதலால் ஆட்சியொப்புமை நட்புறவிற்கேயன்றி அடிமைத் தனத்திற்கு ஏதுவாகாதென்று அறிக.

10. குடியரசியல்பு

கோவரசு, குடியாட்சி, மக்களாட்சி என்னும் மூவகை யாட்சியும் குடியரசாக இருத்தல் கூடும். ஆயின், பொதுமக்கள் நூற்று மேனி எழுபத்தைவர்க்குக் குறையாது தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருத்தல் வேண்டும். அவரால் சட்டசவைக்குத் தெரிந்தெடுக்கப்படுபவர் பள்ளியிறுதி(S.S.L.C.) யளவேனும் படித்திருத்தல் வேண்டும். அமைச்சராயிருப்போர் பட்டந்தாங்கியராகவும் தத்தம் வாரியத்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், குடியர சென்பது ஏட்டுச் சுரைக்காயாகவேயிருக்கும்.

நேரியருக்கு 18 அல்லது 21 அகவை நிரம்பினால் மட்டும் போதாது. சட்டசவைக்குத் தகுந்தவரைத் தெரிந்தெடுக்கும் ஆய்வும் அறிவும் இல்லாத கல்லா மக்களின் நேரியுரிமை, குருடன்கைத் தீப்பந்தமும், குழந்தைகைப் படைக்கலமும் போல் உடையார்க்கும் பிறர்க்கும் தீங்கே விளைவிக்கும். தகுதியில்லாத செல்வரே, ஆயிரக்கணக்கான குடவோலைகளை அல்லது நேரிகளை விலைக்கு வாங்கிக்கொண்டு சட்டசவையுறுப்பின ராக முடியும்.

அறிவும் ஆற்றலுமில்லாத தற்குறிகளும் சிற்றறிவினரும் சட்டசவையராகி, பேரறிஞரையும் பெரியோரையும் ஆளுஞ் சட்டஞ் செய்வது, பிறவிக்குருடரும் புரைபடர்ந்த கண்ணரும் கூர்ங் கண்ணருக்கு வழிகாட்டுவதையே ஒக்கும்.

ஆனைக்கும் அடிசறுக்கு மாதலாலும், தன் குற்றந் தனக்குத் தோன்றாதாதலாலும், முற்றுமுணர்ந்தவர் மக்களினத்திலில்லை யாதலாலும், கட்டுப்பாடில்லாவிடின் காவலனுங் காவானாத லாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சி யரசே

குடியரசிற்கேற்றதாம்.