உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

66

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

(தொல்.1205)

செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்லல் நீத்த உவகை நான்கே

என, அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே 'பண்ணை' (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென்னுஞ் சொற்கு, "முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காமநுகரும் இன்ப விளையாட்டு” என்று பேராசிரியர் உரை கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செயலெல்லாம் விரும்பப்படுவதே. இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென்னுங் கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன.

விளையாட்டால் ஒருவர்க்கு உடலுரம், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, 'கரும்பு தின்னக் கைக்கூலிபோல்' விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில் வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.

சி

ஒருசில விளையாட்டுகள் உலக முழுமைக்கும் பொது வேனும், பல விளையாட்டுகள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும் போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுகளை நாடு முழுதும் பரப்புவது நல்லதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூய தமிழருமான திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச் சிறு நூலை எழுதலானேன்.

வழக்கற்ற விளையாட்டுகள் இறுதியிற் குறிப்பிடப் பட்டுள்ளன. இந் நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டு களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக் கொள்ளப்பெறும்.

சேலம்,

1.12.1954

ஞா. தேவநேயன்