உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

19

ஆடிடம்: அரைப் படைச்சால் (2 furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டு

ஆடப்படும்.

ஆடுமுறை : ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஆடுமுறை யொன்றே.இருவராயின்,இருவரும் ஒரே குழியில் முன்பின்னாகவாவது, வெவ்வேறு குழியில் உடனிகழ்வாகவாவது, தம் குச்சைவைத்து நுனியிற் கோலால் தட்டியெழுப்பி, அது நிலத்தில் விழுமுன் அடித்து இயன்ற தொலைவு போக்குவர். யார் குச்சு மிகத் தொலைவிற்போய் விழுந்ததோ அவன் முந்தியாடல் வேண்டும். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அதை அடிக்கத் தவறினும், குறைந்த தொலைவு குச்சைப் போக்கினும், பிந்தி யாடல் வேண்டும்.

விளையாட்டைத் தொடங்குபவன், முன் சொன்னவாறு குச்சை யெழுப்பி யடித்து இயன்ற தொலைவு போக்குவன். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அடிக்கத் தவறின் அடுத்தவன் அடிக்க வேண்டும். யார் அடிப்பினும் குச்சையடித்துப் போக்கிய பின், எடுத்தடிக்கும் நிலையில் கோலைக் குழியருகே கிடத்தி நிற்பன்.

இன்னொருவன் (எதிரி), தொலைவில், குச்சுப்போகும் திசையிலும் அது விழக்கூடிய இடத்திலும் நின்றுகொண்டிருந்து, அது நிலத்தில் விழுமுன் அதைப் பிடிக்க முயல்வான். பிடித்துவிடின், அவன் குச்சடிப்பவனாகவும், முன்பு அடித்தவன் அதை எடுப்பவனாகவும், மாறவேண்டும். பிடிக்க முடியாவிடின், குச்சு நிலத்தில் விழுந்தவுடன் அதையெடுத்து, அடித்தவன் குழியருகே கிடத்தியிருக்கும் கோலிற் படும்படி யெறியவேண்டும். கோலிற் பட்டுவிடின், அன்றும் இருவர் நிலைமையும் மாறும். படாவிடின், அடிப்பவன் விரைவாய்க் குச்சை யெடுத்து அதை முன்போல் அடித்துப் போக்குவான். அவன் அதை அடிக்குமுன் குச்செடுப்பவன் வேகமாய் ஓடிவந்து அவனைத் தொட்டுவிடின், அன்றும், இருவர் நிலைமையும் மாறும். தொடாவிடின், குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத்தெறிதலுக்கு எடுத்தூற்றுதல் என்று பெயர்.