உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழ்மணம்

9

பண்டைக் காலத்தில் முல்லைநிலத்திலிருந்த ஆயரிடை, ஏறு தழுவி மணப்பதே குலமரபாக இருந்துவந்தது. ஓர் ஆயர்பாடியில் அல்லது சேரியில், ஒரு பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் பெயருக்கு ஒரு சேங்கன்றைப் பெற்றோர் ஒதுக்கி வைப்பர். அக் கன்றைக் காயடியாமலும், வேலையில் வயக்காமலும், கொழுத்த ஊட்டங் கொடுத்துக் கொம்பு சீவிக் கூராக்குவர். ஆண்டுதோறும், குறித்த நன்னாளில், மணப்பருவமடைந்த மங்கையர்க்குரிய காளைகளையெல்லாம் ஒரு தொழுவத்தில் அடைத்து வைத்து, ஒவ்வொன்றாகத் திறந்துவிடுவர். மக்கள் ஆரவாரத்தையும் ஏறுகோட்பறை முழக்கத்தையும், கண்டும் கேட்டும், மருண்டோடும் ஒவ்வொரு கொல்லேற்றையும், மாணியரான ஆய இளைஞர் பிடித்து நிறுத்த முயல்வர். பலர் கொல்லேறுகளாற் குத்திக் கொல்லப்படுவது முண்டு. ஒரு கொல்லேற்றை எவன் பிடித்தடக்கி நிறுத்து கின்றானோ அவன் அவ் ஏற்றிற்குரிய ஆயமகளை மணப்பான். இம் மணமுறை, கலித்தொகை என்னும் சங்க நூலில், முல்லைக்கலியில், விரிவாகக் கூறப்பட் டுள்ளது. வடநாட்டிற் கண்ணன் ஏழ் ஏறுதழுவி நப்பின்னையை மணந்தது இத் தமிழ் மரபே.

இங்ஙனம் ஒரு மறச்செயலை மணமகனது தகுதியாகக் கொள்ளும் வழக்கத்தினால், ஒரு குலத்தாரின் மறத்திறம் மேன்மேலும் வளர்ந்து வருவதுடன், அவர்க்குப் பிறக்கும் குழந்தைகளும் இயல்பாக மறவுணர்ச்சி விஞ்சியவாயிருக் கின்றன. இவ்வாறு, மறஞ்சிறந்த ஆடவரையே பெண்டிர் மணக்கும் ஏற்பாட்டை, ‘பாலியல் தெரிப்பு' (sexual selection) என்பர் டார்வின் பேரறிஞர். ஒரு குலத்தார் தமக்குள்ளேயே நெடுகலும் மணந்து வருவதால் ஏற்படும் எச்சவியற் குறை பாட்டிற்கு ஈடு செய்வது, ஏறுதழுவல் போன்ற மணமகன் மறவியல் தகுதி ஏற்பாடே.

ஏறு தழுவல் என்னும் பண்டை வழக்கமே, இன்று கள்ளர் மறவரிடைச் ‘சல்லிக்கட்டு' என்றும், 'மஞ்சுவிரட்டு' என்றும் வழங்கி வருகின்றது. ஆயர் இவ் வழக்கத்தை நீண்ட காலமாக அடியோடு விட்டுவிட்டதினால், தம் முன்னோரின் மறத்தை முற்றும் இழந்துவிட்டனர். சல்லிக்கட்டு மாட்டுத் தொழுவை இன்றும் பாடி அல்லது பாடிவாசல் என்றழைப்பது, இவ் வழக்கம் பண்டைக் காலத்தில் ஆயர்பாடியில் நிகழ்ந்தது என்பதை உணர்த்தும்.

திருமணத்தன்று மணமக்கள் ஊர்வலம் வருவதும், சில சிற்றூர்களில் அயலூர் மணமகன் வந்து ஒரு பெண்ணை மணந்து மீளும்போது, அவ்வூர் இளைஞர் இளவட்டக் காசு என்னும் கைந்நீட்டம் கேட்பதும், பண்டைக் காலத்தில் ஒரு பெண்ணை நோக்கிப் பல இளைஞர் போட்டியிட்டுப் பொருததைக் குறிப்பாய் உணர்த்தும்.

ஆண்மகப் பேறில்லாத பெற்றோர், தம் மருமகனைத் தம் இல்லத் திலேயே இருத்திக்கொள்வர். இவ் ஏற்பாட்டை ‘இல்லத்தம்’ என்பர் கன்னடர். (2) காதல் மணம்

காதல் மணமாவது, ஓர் ஆடவனும் ஒரு பெண்டும் பெற்றோரைக் கேளாதும் பிறருக்குத் தெரியாதும் ஒருவரையொருவர் காதலித்து, தாமே