உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

தமிழர் திருமணம்

பிராமணரொழிந்த மற்றச் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற மூவகுப்பாரியரும் வடஇந்தியாவுக்குத் தெற்கில் வரவில்லை. இடையிந்தியா விற்கும் தென்னிந்தியாவிற்கும் வந்த ஆரியர் பிராமணரே. இவர்கள் மிகச் சிறுபான்மையராயும் வலிமையற்றவராயு மிருந்ததனாலும், பல முறையாகக் குடும்பங் குடும்பமாய் வந்ததினாலும், போர்செய்து திரவிடநாடுகளை வெல்ல வில்லை. அடுத்துக் கலந்து பல வலக்கார (தந்திர) முறைகளைக் கையாண்டே அவரிடத்தும் கொள்கைகளைப் பரப்பிவிட்டனர்.

தென்னிந்தியாவிற்கு வந்த பிராமணர் தொன்றுதொட்டுத் தமித்து வாழ்வதாலும், திராவிடநாகரிகம் தலைசிறந்தும் இன்றும் அழியாதுமுள்ளது. தமிழ்நாடேயாதலாலும், வடமொழிக் கலப்பின்றியும் தனித்தியங்கக்கூடியது தமிழாதலாலும், தமிழ்நாட்டில் மட்டும் எல்லாவகையிலும் ஆரியதிரவிடத்தை நீரும் நெய்யும் போலப் பகுக்கலாம்.

தலைக்கழகக் காலத் திறுதியில்தான், முதன்முதலாய் விச்சிரவசு, காசிபன் முதலிய தனிப்பட்ட ஆரியர் தென்னாடுவந்து திரவிடப் பெண்களை மணந்தனர்; ஆனால் அவர்களொடு கூடிவாழவில்லை. பின்பு அகத்தியர், திரணதூமாக்கினியார் முதலிய சில ஆரியர் குடும்பங் குடும்பமாய் வந்து குடியேறினர். இதன் பின்புதான் ஆரியர் தொடர்ந்து வரத் தொடங்கினர். ஆயினும், கூட்டங்கூட்டமாய் வந்தது கடைக்கழகக் காலத்திலிருந்துதான். பல்லவர்காலத்திலும், சுந்தரபாண்டியன் காலத்திலும் நூற்றுக்கணக்கான பிராமணக் குடும்பங்கள் தமிழ்நாட்டிற் குடியேற்றப்பட்டன. இதற்குக் காரணம் பிராமணர் மதத்தலைமை பூண்டமையே.

பிராமணர் வருமுன், தமிழ்நாட்டில் முனிவர் அந்தணரென்றும், நூற்றொழிலுள்ள இல்லறத்தார் பார்ப்பாரென்றும் அழைக்கப்பட்டனர். பிராமணர் வந்தபின் முதலாவது பார்ப்பார் பெயரும் பின்பு அந்தணப் பெயரும் அவர்க்கு வழங்கலாயின.

முதலாவது பார்ப்பாராயிருந்த தமிழர் (ஆதிசைவர்?) ஆரியப் பிராமணர் வந்தபின் அவரொடு கலந்திருக்கலாம். 12ஆம் நூற்றாண்டில் இராமா நுசாச்சாரியாரும் சில திரவிடரைப் பார்ப்பனராக்கியதாகத் தெரிகின்றது. இங்ஙனம் சில கலப்புகள் நேர்ந்தாலும் அவை சிறுபான்மையாயும் பிரிக்க முடியாதவையாயு மிருப்பதால், இற்றைத் தமிழ்நாட்டுப் பார்ப்பனரெல்லாரையும் ஆரியரென்றே கொள்ள முடியும்.

பிராமணர் தென்னாடு வந்தபோது அரைநாகரிகராயும் இரப்பவராயுமே வந்தனர். ஆகையால், அவர்களால் தமிழர்க்கு யாதொரு நன்மையுமில்லை. பிராமணர் தாம் எல்லாவகையிலும் தமிழரிடம் நாகரிகமும் நன்மையும் பெற்றுக்கொண்டு, இன்று தலைமாறாகக் காட்டுகின்றனர். இதன் விரிவை ஓப்பியன் மொழிநூலிற் கண்டு கொள்க.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

வாழ்க நிரந்தரம் வாழிய தமிழ்த்திரு நாடு!!