உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. மொழி தோன்றிய வகை

1. முன்னுரை

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் இயன்மொழிகள் (Primitive Lan- guages), திரிமொழிகள் (Derivative Languages) என இருவகைப்படும். ஒன்றையும் சாராது தானே இயல்பாகத் தோன்றிய மொழி இயன்மொழி; ஒரு மொழியினின்று திரிந்த மொழி திரிமொழி.

மொழிகளெல்லாம் ஒரேயளவான சொல்வளமுடையனவல்ல. மக்களின் கருத்து அல்லது அறிவு வெளிப்பாட்டொலியே சொல். உண்பதும் உடுப்பதும் துயில்வதுமே தொழிலாகக் கொண்ட அநாகரிக மலைவாணரின் அல்லது காட்டுவாணரின் கருத்துகள் மிகமிகச் சில. அதனால், அவர்கள் மொழிகளிலுள்ள சொற்களும் மிகமிகச் சில. பல தொழிலுள்ள நாகரிகம் வாய்ந்த மருத வாணரின்அல்லது நாட்டு மக்களின் கருத்துகள் மிகப் பல. அதனால், அவர்களின் மொழிச்சொற்களும் மிகப் பல. எத்தொழிலையும் அநாகரிகன் செய்யுமுறைக்கும் நாகரிகன் செய்யுமுறைக்கும் வேறுபாடுண்டு. இவ் வியல்புபடி, அநாகரிகன் திருத்தமின்றியும் நாகரிகன் திருத்தமாயும் பேசுகிறான். ஆகையால், அநாகரிக நாகரிக மக்களின் மொழிச் சொற்கள் சின்மை பன்மையால் மட்டுமன்றித் திருந்தாமையும் திருத்தமும்பற்றியும் வேறுபடுகின்றன. திருத்தமும் கருத்துத் திருத்தம் சொற்றிருத்தம் என இருபாற்பட்டது. ஆகவே, ஒரு நாட்டாரின் நாகரிகத்தை யறிவதற்கு அவரது மொழிபோற் சிறந்த கருவி அல்லது வாயில் பிறிதொன்றில்லை.

ஒரு மொழியார் அநாகரிகராயின் அவர் பிற நாகரிக மக்களொடு கூடும்போது, தம் அநாகரிக நிலைக்கு அல்லது சொல்லளவுக்குத் தக்கவாறு, நாகரிகரின் சொற்களைக் கடன்கொள்ள வேண்டியதிருக்கும். இஃது இயன்மொழி திரிமொழி ஆகிய இருவகை மொழிக்கும் ஏற்கும்; ஏனெனில், சொற்குறைவும் சொன்னிறைவும் அவ் விருவகைக்கு முண்டு.

பல மொழிகள் ஒன்றாய்க் கலப்பின் கலவை மொழியாம். அது இருமொழிக் கலவை, பன்மொழிக் கலவை என இருவகைப்படும். ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களிருந்த மாத்திரையானே, அதைக் கலவை யென்னமுடியாது. உண்மையில் இன்றியமையாத காற்பங்குச் சொற்களையாவது கடன்கொண்ட மொழியையே கலவைமொழி யென்னலாம்.

இயன்மொழி வகையில், திருந்தாமொழிக்குத் தென்கண்ட (ஆத்திரேலிய) தென் ஆப்பிரிக்க மொழிகளையும் திருத்திய மொழிக்குத் தமிழையும்; திரிமொழி