உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சென்னைப் பல்கலைக்கழக அமைப்புக் குறைகள்

43

மறைமலையடிகள் ஒருவர் தவிர மற்றெல்லாத் தமிழ்ப் புலவர்க்குள்ளும், சிறப்பாகக் கல்லூரி பல்கலைக்கழகப் பேராசிரியர்க்குள், அழுக்காறு இன்னும் போகவில்லை. பதவி சற்று உயர்ந்தவுடன், அதனொடு செல்வமுஞ் சற்றுச் சேர்ந்துவிடின்.

"சிறியரே, மதிக்கு மிந்தச் செல்வம்வந் துற்ற ஞான்றே வறியபுன் செருக்குமூடி வாயுள்ளோர் மூக ராவர் பறியணி செவியு ளாரும் பயிறரு செவிட ராவர்

குறிபெறுங் கண்ணு ளாருங் குருடராய் முடிவ ரன்றே”.

என்னுஞ் செய்யுட்குச் சிறந்த இலக்கியமாகிவிடுகின்றனர். ஒரு தேர்வும் தேறாத ஒருவர் ஒரு பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகிவிடின், தம்மினுஞ் சிறந்தார் ஒருவருமில்லையென்று காட்டவேண்டி, நெஞ்சாரப் பொய்த்து வாயாரத் துணிந்து தன்னேரில்லாத் தமிழாராய்ச்சியாளரையும் தமிழ் வெறியன் என்றும், திராவிடர் கழகத்தான் என்றும், வடமொழிப் பகைவன் என்றும், கோணைமதியன் குறுக்குச் சூழ்ச்சியன் (குயுக்தியான்) என்றும், கூறி மறைத்துவிடுகின்றனர். தமிழறிவற்ற தலைமை யதிகாரிகளும், அவர் ஒரு மேடைப்பேச்சாளராயின் அவரை மேலான புலவரென்று கருதி மேம்படுத்தி விடுகின்றனர். “அரசன் முத்தினால் அரம்பை” என்னும் பழமொழிக்கேற்ப, அவ் வாசிரியரும் தம்மைத் தலைமையாகக் கருதி அறியாத்துறைக்கும் அதிகாரிகளாகிவிடுகின்றனர். இத்தகைய ஆசிரியர், தன்னலமொன்றே கருதித் தமிழைக் கெடுப்பதுடன் காலத்திற்கேற்பத் திருந்திவரும் பிராமணரையும் கெடுக்கின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றப் பாடத்துறைகட்கெல்லாம் அவ்வத் துறையில் தலைமைப் பட்டம் பெற்ற தகுதியாளரையே அமர்த்துகின்றது. ஆயின், தமிழுக்கு மட்டும் சட்டத்துறைப்பட்டம் அமையுமென்று கருதுகிறது. அதோடு கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரெல்லாம் தமிழ் மொழிநூலதிகாதிக ளென்றும் கருதிக்கொள்கிறது. இதனால், அவ் வாசிரியரும் தம்மைத் தவறாக மதித்துக் கெடநேர்கிறது.

காலஞ் சென்ற பண்டாரகர் ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள், சேலத்தி லிருந்து நான் விடுத்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதித் திறனாய்வைப் பற்றி, பர். இலக்குமணசாமி முதலியார் அவர்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லியிருப்பின், இதற்குள், அவ் வகராதி முழுதும் செவ்வனே திருத்தப் பெற்றிருக்கும். ஆயின், அவரே அதற்குத் தடைநின்றார். நான் கடந்த முப்பானாண்டுகளாக மொழியாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும் முறைப்படி செய்து வந்திருந்தும், கால்டுவெலுக்குப்பின் அறிவியன் முறையில் ஒருவரும் தமிழ்ச்சொல்லாராய்ச்சி செய்யவில்லையென்று, துணிந்து எழுதினார். பர். சேதுப்பிள்ளை சொல்லாராய்ச்சிக்கும் என் சொல்லாராய்ச்சிக்கும் வேறுபாடு, கீழ்க்குறித்தவற்றினின்று அறிஞர் தாமே அறிந்துகொள்க.