உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. முயற்சிப் படலம்

உயர்நிலைப் பள்ளிகளும் கல்லூரிகளுமான கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பெறும் பாடங்களுள், தமிழ் ஒன்றே அடி முதல் முடிவரை தருக்கத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடமானதாம். இஃது ஆரியத்தினால் தமிழுக்கு விளைந்த தீங்குகளுள் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கே ஆரியத்தினின்று திரிந்ததாகக் கால்டுவெல் கண்காணியாரும் கூறிவிட்டார். இஃது, ஏற்கெனவே வெறுவாயை மென்று கொண்டிருந்த வடமொழி வெறியர்க்கும் அவரடியார்க்கும் அவல் கிடைத்தது போலாயிற்று. கால்டுவெலார் நுண்மாண் நுழைமதியாரும் நிறைகோல் நடுநிலையாருமா யிருந்தாரேனும், அவர் காலத்திற் கழக (சங்க) நூல் வெளிப்பாடும் குமரிக்கண்ட வரலாறும் மறைமலையடிகள் போலும் புலவரும் தனித்தமிழ் ஆராய்ச்சியும் இன்மையால், தமிழின் உண்மைத் தன்மையை அவர் காண இயலாது போயிற்று. இதனால் அவர் பெயருக்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க.

இயல்பான எளிய தமிழெழுத்துகளும் ஆரியவல்லெழுத்துகளின் மெலிவென்றும், தூய தென்றமிழ்ச் சொற்களும் வடசொற்களின் திரிபென்றும், வலம்புரி முத்திற் புலஞ்சிறந்த தலைத்தமிழ் நூல்களும் சமற்கிருத நூல்களின் மொழிபெயர்ப்பென்றும், செந்தமிழ்க்கே சிறப்பான கலைகளும் அறிவியல்களும், இலக்கண வமைதியும் வடநூல் அடிப்படையினவென்றும், இனி, முழுப் பூசனிக் காயைச் சோற்றில் முழுக்குவது போலத் தமிழ் என்னும் பெயரே திரவிடம் என்பதன் திரிபென்றும், பரவெளி ஆராய்ச்சி மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டி லும் நெஞ்சழுத்தங்கொண்டு நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைவதும், மொழிநூற் பெயரில் வெளியிடுவதுமா யிருப்பதால், வையாபுரி வழியினரும் மறைமலையடிகள் வழியினருமாகத் தமிழ்ப் புலவரும் தமிழாசிரியரும் இருவகையர்.

ஆலைத்தொழில் முதல் அரசியல் வரை எல்லாத் துறைகளிலும் ஆரியம் வேரூன்றி யிருப்பதால், தமிழின் உண்மைத் தன்மையை எடுத்துரைத்தற்கும், காத்தற்கும், நுண்மதி, தமிழாங்கிலப் புலமை, ஆய்வுத் திறன், நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை ஆகிய அறுதிறம் இன்றியமையாது வேண்டும். இவ் வாறும் தவத்திரு மறைமலையடிகளிடம் நிறைவுற விருந்தன. அதனால், தமிழ்ப் புலமையில் பனிமலைபோல் தனிமலையாக இருந்தாரேனும், அவர்கட்கு உறைவுக் காலத்திலும் மறைவுக் காலத்திலும் வேத்தியலாராலும் பொதுவியலாராலும் பாராட்டுமில்லை; பரிசுமில்லை. இந் நிலைமையே அவர் வழியினருக்கும். ஆரியச் சார்பான எக்கல்வி நிலையத்திலும் அவர்க்கு அலுவலுமில்லை; சொற்பொழிவு வாய்ப்புமில்லை.