உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

75

மேற்கொண்டு ஓராண்டு வேலையை நீட்டிக்கும்படி கரணியங்காட்டி வேண்டினேன்; நீட்டித்திலர். இலக்கணப் புலமையில்லாத பர். சேதுவின் திட்டமே இறுதியில் மேற்கொண்டது.

செத்துங் கொடுத்தான் சீதக்காதி.

செத்துங் கெடுத்தார் சேதுப் புலவர்.

'ஆண்டி எப்பொழுது சாவான், மடம் எப்பொழுது ஒழியும்” என்று என் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாட் காத்திருந்தவரும் உண்டு. முறைப்படி எனக்கு மும்மாத அறிவிப்புக் கொடுத்தல் வேண்டும். அதையுங் கொடுத்திலர். ஆயினும் பல்கலைக்கழக உறையுளில் மேற்கொண்டு மும்மாதம் குடியிருக்க இடந் தந்தனர். 1961ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23 ஆம் பக்கல் அண்ணா மலை நகரைவிட்டு வெளியேறினேன். என்னோடு தமிழும் தமிழும் வெளியேறியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எனக்குப் பதவியூன்றாமையாலேயே இக் கட்டுரைத் தொடருக்கு ‘என் அண்ணாமலை நகர் வாழ்க்கை' என்று பெயரிட்டேன்.

நான் வெளியேறியபின், எனக்குக் குறிக்கப்பட்ட பணியைச் செவ்வை யாய்ச் செய்யவில்லை யென்று என்மேற் குறைகூறுவதாகத் தெரிகின்றது. ஒருவன் கையைக் கட்டிவிட்டு அவன் வேலை செய்யவில்லையெனின், எங்ஙன் பொருந்தும்? மொழியியல் துறையின் முதற்பணியாக விளம்பரஞ் செய்யப்பெற்ற, சொற்பிறப்பியல் தமிழ் அகரமுதலியை இன்னும் ஓராண்டுக்குள்ளேனும் தொகுப்பார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எவரேனும் உண்டோ? அறைகூவி அழைக்கின்றேன்.