உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தென்சொற் கட்டுரைகள்

என்னும் நால்வகை வரிநிலையும் முறையே அடைந்த தமிழ் நெடுங் கணக்கு, கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இற்றை நிலையிலேயே யிருந்த தென்பது,

"தொல்லை வடிவின எல்லா வெழுத்தும் ஆண்

டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி”

(98)

என்னும் நன்னூல் நூற்பாவாலும்; கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டி லும், உயிரும் உயிர் மெய்யுமாகிய எகர ஒகரங்களும் குற்றியலிகர குற்றிய லுகரங்களும் புள்ளி பெறுதலும், உட்புள்ளிபெற்ற பகர வடிவே மகர வடிவாதலும், தவிர, மற்றையவெல்லாம் இற்றையவே யென்பது தொல் காப்பியத்தாலும், அறியக்கிடக்கின்றன.

எழுத்து எழுதப்படும் கருவிக்கேற்ப வேறுபட்டிருத்தல் வேண்டு மாதலால், எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதுதற்கு ஒரு வரைவெழுத்து முறையும், உளி கொண்டு செம்பிலும் கல்லிலும் செதுக்கற்கு ஒரு வெட்டெழுத்து முறையும், தொன்று தொட்டுக் கையாளப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது. தமிழின் தொன்மையையும் தலைமையையும் ஆய்ந்தறியும் மதுகையும் நடு நிலைமையும் இல்லா அயலார், வரைவெழுத்தும் வெட் டெழுத்தாகிய வட்டெழுத்தும் ஒன்றே யெனப் பிறழவுணர்ந்துவிட்டனர்.

ஆரியவொலித்திரிபு

தமிழொலிகள், முதலாவது, தென் திரவிடமாகிய தெலுங்கில் வன்மைபெற்று வட திரவிடத்தில் வளர்ச்சியடைந்து, வட மேலையாரிய (ஐரோப்பிய) மொழிகளில் இயற்கையாரிய வடிவுற்று, இறுதியில் கீழையாரியமாகிய சமற்கிருதத்தில் பெரும்பாலும் செயற்கை வடிவு கொண்டுள்ளன. இதை,

"செந்திறத்த தமிழோசை வடசொல் லாகி”

என்னும் திருமங்கையாழ்வார் திருநெடுத்தாண்டகத் தொடர் இரட்டுறல் முறையிற் குறிப்பதாகக் கொள்ளலாம்.

என்றும் எங்கும் பிஞ்சு முற்றிக் காயாகுமேயன்றிக் காய் இளந்து பிஞ்சாகாது. அதுபோல், இயற்கையான மொழி வளர்ச்சியில், மெல்லொலி வலித்து வல்லொலியாகுமே யன்றி வல்லொலி மெலிந்து மெல்லொலி யாகாது. குழந்தை வாயில் வல்லொலி பிறவாததுபோல், முந்தியல் மாந்தன் வாயிலும் வல்லொலி பிறப்பதில்லை. பழந்தமிழன் சூடு என்று சொன்ன சொல்லை இற்றைத் தமிழன் கொச்சை வழக்கில் ஜூடு என்று சொல் வதையும், triplus என்ற இலத்தீன் சொல்லினின்று treble என்னும் ஆங்கிலச்சொல் திரிந்திருப்பதையும் நோக்குக. kna என்ற தியூத்தானியச் சொல் gno என்று இலத்தீனில் திரிந்ததும் அதுவே.