உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழித் தென்சொற்கள்

33

தமிழிலுள்ள எண்ணுப்பெயர்களெல்லாம் உகரவீற்றன என்று கொண்டு, தமிழர்க்கு ஆதியில் 100 வரையில்தான் எண்ணத் தெரிந்த தென்றும், 999 வரையில்தான் தமிழிலக்கமென்றும், ஆயிரம், இலக்கம், கோடி என்னும் பெயர்கள் வடசொற்களென்றும் சிலர் கூறுகின்றனர். வான நூல் கணித நூல் முதலிய கலைகளில் எத்துணையோ வல்லுநரும் சிற்றிலக்கம், பொன்னிலக்கம் முதலிய அளவைகளையும் ஆய்தக்குறுக்கம் மகரக் குறுக்கம் முதலிய மாத்திரை நுணுக்கங்களையும் அறிவதில் நுண்மாண் நுழைபுலத்தினரும், வெள்ளம், ஆம்பல் முதலிய பேரெண்களைக் குறியிட்டாண்டவருமான முன்னைத் தமிழர்க்கு மூன்று தானங்கட்குமேல் எண்ணத் தெரியாது என்பது எங்ஙன் பொருந்தும்?

"ஆயிரக் கிளவி வரூஉங் காலை” எனத் தொல்காப்பியத்துட் கூறியிருப்பதால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஆயிரம் என்னும் எண்ணும் அதன் பெயரும் தமிழ்நாட்டில் வழங்கியிருந்தமை அறியப்படும். இலக்கமென்பது ஒரு பெரிய இலக்கம் (எண்).

கோடி என்பது கோடி (கடைசி) யெண். இலக்கம் தமிழ். lakh E. லக்ஷ்ம் Skt.

கோடி தமிழ். கோட்டி, Skt. குடோடு Arabic, crore, E.

லௌகீகம். உலகம்-லோகம்-லெளகீகம்.

உலகு + அம் = உலகம்,

உலகு = உலப்பது: உலத்தல் = அழிதல்.

'கால முலகம்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால், உலகம் என்னும் சொல் தொல்காப்பியருக்கு முன்பே தமிழ்நாட்டில் வழங்கிய தென்றும், செந்தமிழ்ச்சொல் என்றும் அறியப்படும்.

உலகம் என்பதன் திரிபாகிய லோகம் என்னும் சொல் வடமொழியில் லௌகீகம் எனத் தத்திதாந்தமாகும்.

சாமம். சமம்-சாமம்.

இரவு மூன்று சமபாகமாகப் பகுக்கப்பட்டதினால், ஒவ்வொரு பாகமும் சாமமெனப்பட்டது.

ஒரு சாமம் பத்து நாழிகை.

சாமம்-யாமம், ச-ய போலி.

மூன்று சாமங்களும் முதற்சாமம், நடுச்சாமம், கடைச்சாமம் என உலகவழக்கிலும், மாலையாமம், நள்ளியாமம், வைகறையாமம் எனச் செய்யுள் வழக்கிலும் கூறப்படும்.

யாமம் என்பது சிறப்பாக நடுச் சாமத்தைக் குறிக்கும்.

சின்னம், சின்னம்=அடையாளம்.