உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கருப்பும் கறுப்பும்

கறு-கறுவு=நீள்சினம், மனவயிரம்.

“கறுவி வெகுண்டுரைப்பான்” (திரிகடு. 46)

கறுத்தல் = மங்கிச் சிறிது கருத்தல், எ.டு : கறுக்கன் வெள்ளி. கறுப்பு = கறை,குற்றம், தழும்பு, கருமேகநோய்.

95

கறு - கறை = கருத்த களங்கம். "கறைமிடறு" (புறம். 1:5) கறை = களங்கம், மாசு, குற்றம், உறைந்து கருத்த அரத்தம். கறுப்புக் கட்டுதல் பயிர்முதிர்ந்து இருண்ட பச்சைநிறங்

கொள்ளுதல்.

கறுத்தல் = முற்றுதல். “கௌவை கறுப்ப” (மதுரைக். 371)

கறுப்புவெற்றிலை = இருண்ட பச்சை வெற்றிலை.

பச்சை, நீலம், கருப்பு மூன்றும் ஓரின நிறங்களாதலால், பயிர் முற்றி இருண்டபசுமை யடைதல் கறுத்தல் எனப்பட்டது.

இங்ஙனம் வழிப்பொருள்கட்கே கறுப்பு என்னும் வடிவம் உரியதாம். ஆயினும், 10ஆம் அல்லது 11ஆம் நூற்றாண்டினதான பிங்கலந்தையில் கறுப்பு என்னுஞ் சொற்குக் கருமைப் பொருள் குறிக்கப்பட்டுவிட்டதனால், அதற்குப் பிற்பட்ட இலக்கியத்தில் அது அம் முதற்பொருளிலும் வழங்கலாயிற்று.

கம்பராமாயணம், நகர் நீங்கு படலம் 58ஆம் செய்யுளில், கறுத்தாய் என்னும் வடிவம், பொறுத்தாய், இறுத்தாய், வெறுத்தாய் என்னும் ஏனையடி முதற்சீர்கட்கு எதுகையாக வந்ததாகக் கருதலாம். அதே வனப்பில், இலங்கை காண்படலம், 47ஆம் செய்யுளில், நாள் என்னும் சொல், யாழ், வாழ், பாழ் என்பனவற்றிற்கு எதுகையாக நாழ் என்று வந்திருத்தல் காண்க. "ஓர் கறுப்பு மில்லாத” என்னும் படிக்காசுப் புலவர் பாட்டிலும், "ஆர் கறுப்பன்,” “பேர்கறுப்பன்” என்பனவற்றிலுள்ள றகரம் எதுகைபற்றியதே.

பொதுவாக, பிற்காலத்திலக்கியத்தில் சொற்கள் சிறப்புப் பொருள் கருதாது மோனையெதுகைத் தொடை யொன்றேபற்றி ஆளப்பட்டுள, ஊடல், புலவி, துனி என்னும் மூன்றும் மூவேறு நிலையைக் குறிப்பனவா யினும், ஒரே பொருளில் ஆளப்பட்டிருத்தலைக் காண்க.

ஆதலால், கறுகறுத்தல் (மிகுந்த கருநிறமடைதல், இலக்கண விளக்கம், 325, உரை), கறுத்த காக்கட்டான் (கருங்காக்கணம், யாழ்ப்பாண அகராதி), கறுத்தகார் (குறுவை நெல்வகை), கறுத்தவன் (கருநிறமுடையவன்) கறுத்தவுப்பு, கறுப்பன் (கரியவன்), கறுப்புக் கட்டுதல், கறுப்புக் கன்னிமார், கறுப்புக் காஞ்சொறி, கறுப்புக் குங்கிலியம், கறுப்புக் கொள், கறுப்புத்தாமர், (ஒருவகை மரம்), கறுப்புத்தேயிலை, கறுப்புப்பயறு, கறுப்புப்புள்ளி, கறுப்புப்பூலா, கறுப்பு மட்டிவாய், கறுப்பு மணித்தக்காளி, கறுப்புவரால், கறுப்பு வவ்வால், கறுப்பு வீரம் (விளக்குக்கரி) முதலிய பிற்கால இலக்கிய வழக்கும் அகர முதலி வழக்கும் கொள்ளத்தக்கனவல்ல.