உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




133

எகர ஒகர இயற்கை தேவநாகரி தோன்றுமுன் வடமொழிக்குப் பயன்படுத்தப்பட்ட கிரந்தவெழுத்தில் உள்ள ஓகார வடிவு, இன்று தமிழில் உள்ளது போன்றதே. கிரந்தவெழுத்து, தமிழெழுத்தினின்றே திரிந்ததென்பது முன்னரே பன்முறையும் கூறப்பட்டது.

தொல்காப்பியர் கூற்றுகளிற் சில மறுப்பிற் கிடமானவை. "எகர ஒகரத் தியற்கையும் அற்றே” என்று அவர் சேரநாட்டு வழக்கையே கூறியுள்ளார்; அவர் வாழ்ந்ததும் சேரநாடே. அவர் காலத்தில் அங்ஙனம் வழங்கி யிருப்பினும், காலமெல்லாம் அது தொடரவேண்டு மென்னும் யாப்புற வில்லை. அவர் காலமாகிய கி.மு. 7ஆம் நூற்றாண்டிற்குப் பின் இன்று 24 நூற்றாண்டு கடந்துள்ளது. இலக்கண விலக்கியங்களிலுள்ள தவறான அல்லது பழைமைபட்ட கருத்துகளைத் திருத்துவதற்கு, அதிகாரமுள்ள நூலாசிரியனுக்கு எக்காலத்தும் உரிமையுண்டு. எகர ஒகரம் பற்றிய தொல் காப்பியர் கூற்றையும் நன்னூலார்க்கு முன்பே ஒருவர் மாற்றியிருத்தல் வேண்டும். அதனையே,

'தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்(டு) எய்தும் எகர ஒகரமெய் புள்ளி”

என்று 13 ஆம் நூற்றாண்டினரான பவணந்தி முனிவர் கூறினார்.

(160T. 98)

இதன் பொருள், எல்லா எழுத்துகளின் வடிவும் தொன்றுதொட்டு வழங்கி வருவனவே. ஆயின், அக்காலத்தில் (பண்டைக் காலத்தில்) எகர ஒகர உயிர்களும் அவற்றைக் கொண்ட உயிர்மெய்யெழுத்துகளும் புள்ளி பெற்றன; என்றே தெள்ளத் தெளிவாகக் கொள்ளக் கிடக்கின்றது. இங்ஙனங் கொள்ளாக்கால், “ஆண்டு... புள்ளி" என்பது மிகைபடக் கூறலாகவும், சிறிதும் பயனற்றதாகவும் இருத்தல் காண்க. “தொல்லை வடிவின எல்லாம்” என்பதிலேயே, எகர ஒகர மெய் புள்ளிபெற்றமை அடங்கியிருக்க அதனை யேன் மீண்டும் எடுத்துக் கூறவேண்டும்! ஆகவே, தொல்லை வழக்கிற்கும் உள்ள வழக்கிற்கும் வேறுபாடு காட்டவே, பிற்கூற்றெழுந்த தென்க.

இதை நோக்காது, “எல்லா வெழுத்துகளும் பல்வேறு வகைப்பட எழுதி வழங்கும் பழைய வடிவினையுடையவாம். அவ் வடிவை யுடையனவாய் வழங்குமிடத்து, எகரமும் ஒகரமும் மெய்களும் புள்ளியைப் பெறும்” என்றுரைத்தார் ஆறுமுக நாவலர். (19ஆம் நூற்றாண்டு)

இதனையே ஒட்டியுரைத்தார் வை. மு. சடகோபராமானுசாச்சாரியார். மயிலைநாதரும், “எல்லாவெழுத்தும் பழையதாக வருகின்ற வரி வடிவினவே யாம்; அவ்விடத்து எகரமும் ஒகரமும் மெய்களும் புள்ளிபெற்று நிற்பனவாம்." என்றே கூறி,

'ஆண்டு' என்ற மிகையானே, தாது, ஏது என்றற்றொடக்கத்து ஆரிய மொழிகளும்; எட்டு, கொட்டு என்றற்றொடக்கத்துப் பொதுமொழிகளும்; குன்றியாது, நாடியாது, எட்டியாண்டுளது என்றற் றொடக்கத்துப்