உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

இலக்கணக் கட்டுரைகள்

குறிப்பதற்கான சொற்களைத் தம் தாய்மொழியிலேயே ஆக்கிக்கொண்டனர். இம் முறையைத் தமிழரும் பின்பற்றலாம்.”

பெரும் புலவரும் பெருந் தமிழ்க்காவலரும் இங்ஙனம் எழுத்து மாற்றத்தை எதிர்ப்பது கவனிக்கத்தக்கது.

பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்துமாற்றமன்று. செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தொடு வாழச்செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. 'விடுதலை', 'குடியரசு' முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர்போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே, நான் பெரியாரொடு நெருங்கிய தொடர்புகொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டதோ, அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம்பற்றி ஏதேனுஞ் சொன்னால், “அதெல்லாம் நீங்களே தமிழ்ப் பண்டிதர்களாகச் சேர்ந்துகொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப்போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்றவரை சமுதாயத்தொண்டு செய்பவன்” என்பார். ஒருமுறை என் ஒப்பியன் மொழிநூல்பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப் பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியு மிருக்கிறேன்.

ஒருமுறை, நான் காட்டுப்பாடியிலிருந்தபோது, எனக்கு வருவா யில்லை யென்று தெரிந்து, என் வீடு தேடிக் கொஞ்சம் பணங்கொடுக்க வந்து, நான் ஊரில் இல்லாததால் அக்கம்பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு, நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்தபோது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து, இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்திற் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது, அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்கட்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவதுபோல், பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும்,