உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

தமிழியற் கட்டுரைகள்

மேலும், ஆரியர் வந்தபின் தமிழ் மொழி வளர்ச்சியும் மொழி யாராய்ச்சியும் தடுக்கப்பட்டு விட்டதனால், கால்டுவெலார் குறைகூறல் வலியற்றதாகின்றது.

செந்தமிழ் இயல்பு

1. தூய்மை அல்லது பிறமொழிச் சொல்லின்மை.

2. திருத்தம் அல்லது எழுத்தும் சொல்லும் ஒலிப்பிலும் எழுத்திலும் உரிய வடிவிலிருத்தல்.

3. இலக்கணம் அல்லது சொற்றொடரமைப்பில் வழுவின்மை. இம்மூவியல்பும் இல்லது கொடுந்தமிழ்.

தெற்கே மூழ்கிப்போன பழம் பாண்டி நாட்டின் தென்கோடியில் இருந்த குமரிமலைத் தொடரின் தென் கொடுமுடி, பனிமலை யளவு தொலைவிலிருந்த தனாலும், இறந்துபட்ட முதலிரு கழக நூல்கள் ஆயிரக்கணக்கின வாதலாலும், அக்காலத்துத் தென்சொல்வளம், குறைந்த பக்கம் இன்றுள்ளதுபோல் இருமடங்கின தாய் இருந்திருத்தல் வேண்டும். வணிக வாயிலாக வந்த வெளிநாட்டுப் பொருள்கட்கெல்லாம், உடனுடன் தமிழ்ப் பெயர்கள் புனையப்பட்டன. செந்தமிழ் நிலம்

செந்தமிழ் வழங்கிய நிலம் பெரும்பாலும் பாண்டி நாடாகவே யிருந்தது. தமிழ் தோன்றி வளர்ந்த நிலமும் முக்கழகமும் இருந்த நாடும் பாண்டி நாடேயென்றும், அவற்றைப் புரந்தவர் பாண்டியரே யென்றும் அறிதல் வேண்டும்.

"வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும்” என்பது, பிற்காலத்துப் பொருளில் புனைந் துரையாம்.

செந்தமிழ்ச் சொல்வகை

செந்தமிழ்ச் சொற்கள் இயற்சொல் (Primitive), திரிசொல் (Derivative) என இருவகைப் படுத்தப்பட்டன. எ-டு: வெள் என்பது இயற்சொல்; வெள்ளம், வெள்ளி, வெள்ளை, வெளி, வெளில், வெளிறு, வெளு என்பன திரிசொல்.

கொடுந்தமிழ் நிலமும் திசைச்சொல்லும்

கொடுந்தமிழ் நிலங்களில் தனிச்சிறப்பாக வழங்கும் சொற்கள் (இக்காலத்து மேனாரிக்கம் என்னும் தெலுங்கச் சொல்லும் சமாளி என்னும் கன்னடச் சொல்லும் போல்வன), ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பல திசை யினின்றும் வந்தமை பற்றித் திசைச்சொல் (Provincialism) எனப்பட்டன.