உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழா வாழ்த்துரை விளக்கம்

163

கோடு-கோட்டம்-1. வளைவு. "மரத்தின் கனக்கோட்டத்தீர்க்கு நூல்" (நன். 25), மிதி வண்டிச் சக்கரம் கோட்டம் பட்டிருக்கிறது. (உலகவழக்கு). 2. வணக்கம் (உடல்வளைவு). "முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடி வெற்பன்” (திருக்கோவை, 156. 3. வணருறுப்புள்ள அல்லது வளைந்த தண்டுள்ள யாழ். (பிங்.) 4. வளைந்த அல்லது சூழ்ந்த குளக்கரை அல்லது ஏரிக்கரை. “உயர் கோட்டத்து......வான் பொய்கை” (பட்டினப். 36). 5. மனக்கோணல். “உட்கோட்ட மின்மை பெறின்" (குறள். 119). 6. நடுநிலை திறம்புகை. “கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது." (தேவா. 1182:2). 7. வேலி சூழ்ந்த தோட்டம். (பிங்.). 8. அரண்வேலி சூழ்ந்த பாசறை. (பிங்.). 9. மதில் சூழ்ந்த பள்ளிபடை அல்லது கல்லறை. “சுடும ணோங்கிய நெடு நிலைக் கோட்டமும்” (மணி. 6:59) 10. மதில் சூழ்ந்த கோயில். “கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்” (சிலப். 14:10). 11. மதில் சூழ்ந்த சிறைச்சாலை. "கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க” (சீவக. 262). 12. சாலை. “அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து” (மணி. 19:133), “அறஞ்செய் கோட்டம்” (மணி. பதிகம், 72). 13. மதில் சூழ்ந்த நகர். (பிங்.). 14. வட்டாரம் அல்லது மண்டலம் என்னும் நாடு. (பிங்). 15. மதில் சூழ்ந்த இடம். 16. இடம். (பிங்).

இங்ஙனம், கோயிலைக் குறிக்கும் கோட்டம் என்னும் சொல், உல் என்னும் மூல வேரினின்றும் குல் வேரினின்றும் குல் என்னும் அடிவேரினின்றும் தோன்றிய தூய தொன்சொல்லாயிருப்பினும், பிராமணத் தமிழ்ப் புலவர் வையாபுரிப் பிள்ளையை)த் துணைக்கொண்டு, நாலிலக்கத்திற்கு மேற்பட்ட செலவில், கால் நூற்றாண்டிற்கு மேற்பட்ட காலத்தில், தமிழ் சமற்கிருதக் கிளையென்னும் கருத்துப்படத் தொகுத்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, அதை ஆரிய மரபுப் படி 'கோஷ்ட்ட’ (koshta) என்று திரித்து வட சொல்லாகக் காட்டியுள்ளது.

மானியர் உவில்லியம்சு சமற்கிருத-ஆங்கில அகரமுதலியில், 'கோஷ்ட்ட' என்னுஞ் சொற்கு மூலமென வினாக்குறியுடன் ஐயுறவாகக் காட்டப்படும் சொல், to tear asunder, to pinch, to force or draw out, extract, to knead, to test, examine(?), to shine (?), to gnaw, nibble, to weigh, balance என்று பொருள் குறிக்கப்பட்டுள்ள 'குஷ்' என்பதே. குஷி (வயிறு), கோச (உறை) என்பன உறவுச் சொற்களாயிருக்கலாமென்றுங் குறிக்கப்பட்டுள்ளது. அறிஞர் இதன் புரைமையைக் கண்டு கொள்க.

கோயில், கோட்டம், நகரம், குடிகை, நியமம் என்பன ஒரு பொருட் சொற்களாகச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் ஆளப்பட்டுள்ளன. இவற்றுள் 'நியமம்' ஒன்றே வடசொல். ஆயினும் அதற்கு முன்னுள்ள முச்சொல்லும் வடசொல்லேயென்று துணிந்து ஏமாற்றுவர் ஆரியர்.

ஆரியம், சமற்கிருதம், கீர்வாணம், தேவபாடை, வடமொழி என்பன ஒரு பொருட் சொற்கள்.