6
'திரவிடம்' என்பதே தீது
நாடுகளெல்லாம் பெரும்பாலும் மொழியடிப்படையிலேயே அமைந்திருப்பதனாலும், அதன் வழியாகவே முன்னேறுவதாலும், தமிழர் யாவரும் தமிழ்ப்பற்றுக் கொண்டிருத்தல் வேண்டும். எந்நாட்டாராயினும், தமிழ்ப்பற்றுடையார் தமிழரே. இந்நாட்டாராயினும், அஃதில்லார் அயலாரே.
தமிழ்ப் பெயரே தாங்குதலும், இயன்றவரை தூயதமிழிற் பேசுதலும், எழுதுதலும், திருமணமும், சடங்குகளும் கோயில் வழிபாடும் தமிழிலேயே நடப்பித்தலும், மக்கள் உலகத்தில் 'தேவமொழி'யில்லை யென நம்புதலும், இந்திக் கட்டாயக் கல்வியைத் தமிழ் நாட்டில் அடியோடொழித்தலும், தமிழ் நாட்டிற்குத் தமிழ் நாடென்ற பெயரிடுதலும், தமிழன் என்பதற்கு அடையாளமாம். தமிழிற்கு இடைக் காலத்தில் நேர்ந்த இழிவினால் பல தென் சொற்கள் வழக்கற்றுப் போயின. அவற்றை மீண்டும் வழக்கிற்குக் கொண்டு வருதல் வேண்டும்.
கால்டுவெல் கண்காணியார் முதன் முறையாகத் திராவிட மொழி களை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மை யாலும், தமிழைத் திரவிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லா திருந்தது. இக்காலத்திலோ, ஆராய்ச்சிமிகுந்து விட்டதனாலும், வட மொழியும் இந்தியும் பற்றிய கொள்கையில், தமிழர்க்கும் பிற இன மொழி யாளர்க்கும் வேறுபாடிருப்பதனாலும், தமிழென்றும், பிறஇனமொழி களையே திரவிடம் என்றும் வேறு படுத்திக் காட்டுதல் இன்றியமையாததாம்.
தமிழ் தூய்மையான தென் மொழியென்றும், திரவிடம் ஆரியங் கலந்த தென் மொழியென்றும் வேறு பாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல். வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழாகாது. வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும். ஆதலால், வட சொல் சேரச் சேரத் திரவிடத்திற்கு உயர்வு; அது தீரத்தீரத் தமிழிற்கு உயர்வு. திரவிடம் என்ற மொழி நிலையே வடமொழிக் கலப்பால் தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும்; திரவிடம் வடமொழித் துணையின்றித் தினித்தியங்காது.